ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னை அவதூறாகப் பேசிய இளைஞர்களை மன்னிக்க விரும்புவதாகவும், அவர்களை சரியான வழியில் வழிநடத்துவது சமூகத்தின் பொறுப்பு எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வன்முறை ஏற்பட்டாலும், ஜூலை 26 தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து போராட்டம் நிறைவடைந்திருக்கிறது. அதேசமயம், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட 13 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
இதற்கிடையில் தான், இந்தப் போராட்டத்தின் போது உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரதமர் மோடி குறித்தும் அவரது தாயார் குறித்தும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நொய்டா காவல் துறையினர் இந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது டெல்லி காவல்துறை இந்த வழக்கு மாற்றப்படுகிறது. இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களில் பேச்சுரிமை மற்றும் அரசியல் விமர்சனங்களின் எல்லைகள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தசூழலில் தான், பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்த வீடியோ இந்த சம்பவம் குறித்துப் பேசியிருப்பதுடன், தன்னை திட்டிய இளைஞர்களை நான் மன்னிக்கிறேன் எனவும் பேசியிருக்கிறார். நீட் முறைகேடு போராட்டத்தில் இருந்தே பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மக்களுடன் உரையாற்றி வருகிறது. அந்தவகையில் தான், நேற்று நள்ளிரவு அவரது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியானது. அதில், பேசியிருக்கும் பிரதமர் மோடி, ”ஜந்தர் மந்தரில் நடந்ததை உலகமே பார்த்துள்ளது. வழிதவறிய சில இளைஞர்கள், எந்தவொரு நாகரிகமற்ற மிகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் என்னையும், எனது மறைந்த தாயாரையும் கூடத் திட்டினார்கள். எனினும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருவதற்குப் பதிலாக, அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
அவர்கள் எத்தகைய மனநிலையில் இருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இன்று நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தவறுகள் ஏற்படுவது சகஜம். மேலும், வாழ்க்கையின் அந்தக் கட்டத்தில், மக்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. இளமையாக இருப்பதன் அர்த்தமே அதுதான். நான் சம்பத்தப்பட்டவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகமும் எனது இந்த வேண்டுகோளை ஏற்கும் என்று நம்புகிறேன்.
அவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற வழக்குகளுக்கு இழுப்பதோ, அல்லது அவர்களது குடும்பத்தினரைத் துன்புறுத்துவதோ நிலைமையை மாற்றிவிடாது. அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
