அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என சீனா விடுத்த பகீரங்க எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோபோக்கள் உற்பத்தியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்த நாடுகள் தற்போது மனித உருவிலான ரோபோக்கள் (Humanoid Robots), மற்றும் நான்கு கால் ரோபோக்கள் (Quadruped Robots) தயாரிப்பிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளன.

எனினும், சீனா இதுபோன்ற ரோபோக்களை பிறநாடுகளைவிடக் குறைவான விலையில் உற்பத்தி செய்வதால் அதற்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் சீனாவின் இந்த நவீன ரோபோக்களுக்கான தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான நவீன ரோபோக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அரசு இந்த வகை நவீன ரோபோக்களுக்கும், மின்சார இன்வெர்ட்டர்கள் (Power Inverters) இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ரோபோக்கள் மற்றும் இன்வெர்ட்டர்கள் மூலம் அரசின் முக்கிய ரகசியத் தரவுகள் திருடப்படலாம் அல்லது தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படலாம் என்றும், சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த தடை புதிய மாடல் ரோபோக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கெனவே அமெரிக்காவில் அனுமதி பெறப்பட்டு சந்தையில் உள்ள பழைய மாடல்களைத் தொடர்ந்து விற்பனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், சீன இறக்குமதியைக் குறைத்து அமெரிக்க தயாரிப்புகளுக்கு சந்தையைத் திறக்கும் வகையிலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, சீனா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. தனது நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, சீன நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புவதையும், பொருளாதாரத் தடைகள் மூலம் அவற்றை அச்சுறுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது.
