நான் என்ன சொல்வேன் என்றால், இந்த 100% ஆற்றலை உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் செலவிடுங்கள். உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தில் 1% சதவீதம்கூடச் செலவிடாதீர்கள்.
நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர் மன்றமான ‘AAFA’-வின் உறுப்பினர்களைச் சந்தித்த நிகழ்வு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பம்சமாக Allu Arjun Fans Association உறுப்பினர்களுக்கான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அல்லு அர்ஜுன் அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், மாநிலக் குழு உறுப்பினர்களுக்கு ₹5 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும், மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கு ₹3 லட்சம் மதிப்பிலான காப்பீடும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 900-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பயனடைவார்கள் சொல்லப்படுகிறது.

Allu Arjun
இந்நிகழ்வில் பேசிய அல்லு அர்ஜூன், “2006லிருந்து என் ரசிகர்கள் சமூகப் பணிகள் செய்வதைப் பற்றி பலரும் பேசுவதைக் கேள்விப்படுகிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் தங்களால் இயன்ற அளவு நல்ல விஷயங்களைச் செய்வது குறித்து அறிந்த பின்னர்தான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. எனக்கு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு எனப் பல பகுதிகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமா வெளியீட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் சமூகப் பணிகள் செய்கிறார்கள், இது ஒரு நல்ல கூட்டுச் சக்தி. இதனைச் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும் என என் மனதில் தோன்றியது. ரசிகர்கள் எனச் சொல்லும்போது ரசிகர்கள், Anti – Fans எல்லோருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என எப்போதிருந்தோ நினைத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் நாம் 100% உடன் எழுகிறோம். அந்த 100 சதவீதத்தை உங்கள் நேரம், ஆற்றல், மதிப்பெண்கள் அல்லது பணம் என எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அந்த ஆற்றல் குறையத் தொடங்குகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், அதை எதில் செலவிட அல்லது முதலீடு செய்ய நீங்கள் தீர்மானிக்கிறீர்கள் என்பதுதான்.
நான் என்ன சொல்வேன் என்றால், இந்த 100% ஆற்றலை உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் செலவிடுங்கள். உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தில் 1% கூடச் செலவிடாதீர்கள். பிடிக்காத விஷயத்தில் நெகட்டிவ் கருத்து சொல்வது, ட்ரோல் செய்வது என எதுவும் வேண்டாம். ஒருவரை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலோ, இணையத்தில் கேலி செய்வதிலோ அல்லது அவர்களைப் பற்றிப் பேசுவதிலோ உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

Allu Arjun AAFA
உங்களிடம் 100 ரூபாய் இருந்தால், உங்களுக்குத் தேவையே இல்லாத ஒரு விஷயத்திற்காக அதைச் செலவிடுவீர்களா? மாட்டீர்கள், இல்லையா? அப்படியிருக்க, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராத விஷயங்களுக்காக உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் ஏன் செலவிட வேண்டும்” என்று பேசியுள்ளார்.
