தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பங்கேற்ற நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தே மாதரம் பாடல் முதலாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கலந்து கொண்டார். முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படவேண்டும் என பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தது. அதன்படியே, பட்டமளிப்பு விழா நடைபெறும் என பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்தசூழலில் தான், பட்டமளிப்பு ஏற்கனவே அறிவித்திருந்த படியே, இன்று முதலாவதாக வந்தே மாதரமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. எனினும், ஆளுநர் பங்கேற்ற சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட்டது. இந்தசூழலில் தான், தற்போது ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல, தமிழ்த்தாய் எழுதிய மனோன்மணியம் பெ. சுந்தரனார் பெயரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தசூழலில் தான், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல் குமார், ”தமிழகத்தைப் பொறுத்த மட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம் , தொடர்ந்து தமிழக அரசு இதற்கான அழுத்தத்தையும் வழங்கும். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்விவகாரத்தில் மக்கள் மாளிகை வழிகாட்டுதல் ஏற்புடையதல்ல. பாஜக ஆளும் மாநிலங்களில் அவரவர்களின் மாநில மொழி பாடலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது.!
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தராமல் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! மனுநீதி சோழன் மண்ணில் தமிழ் மரபை மீறும் ஆளுநருக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விழாவைப் புறக்கணித்து மாண்புமிகு அமைச்சர் விஸ்வநாதன், எம்.பி. இராபர்ட் புரூஸ் ஆகியோர் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர். ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
