கத்தாரின் ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு நிலையத்தில், பணிகளை மீண்டும் தொடங்கியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 54 பேர் காயமடைந்தனர் மற்றும் 18 பேரைக் காணவில்லை.
Summary
உலகின் மிகப்பெரிய LNG மையங்களில் ஒன்றான கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில் திடீர் உள்வெடிப்பு, தீவிபத்து ஏற்பட்டதில் 54 தொழிலாளர்கள் காயமடைந்து, 18 பேர் மாயமாகியுள்ளனர். மார்ச் மாத சேதங்களை சரிசெய்து ஆலையை மீண்டும் இயக்கும் பணிகளின்போது விபத்து நடந்ததாக கத்தார் எனர்ஜி தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையங்களில் ஒன்றான கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் (Ras Laffan Industrial City) உள்ள ‘பர்சான்’ (Barzan) எரிவாயு ஆலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்த நிலையில், அந்த ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் 18 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

ras Laffan explosion
கத்தார் நாட்டின் பொதுத்துறை எரிசக்தி நிறுவனமான ‘கத்தார் எனர்ஜி’ (QatarEnergy) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வளைகுடா மோதல்களின்போது மார்ச் மாதம் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்து, ஆலையை மீண்டும் இயக்கும் பணிகளின் (Start-up operations)போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடன் அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், ஆலையின் உள்ளே ஏற்பட்ட உள்வெடிப்பின் (Internal explosion) காரணமாகப் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கத்தாரின் சர்வதேச தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் (Qatari International Search and Rescue Group) சிவில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாயமான 18 தொழிலாளர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து ’ஒரு தொழில்நுட்பக் கோளாறு’ (Technical accident) காரணமாகவே நடந்துள்ளது என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நச்சு வாயுக்களோ அல்லது கசிவுகளோ ஏதும் ஆலையிலிருந்து வெளியேறவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலகளவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் சுமார் 20 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள மிக முக்கியமான எரிசக்தி மையம் இந்த ராஸ் லஃப்பான் ஆகும். இந்த வெடிப்பு உலகளாவிய எரிவாயு விநியோகத் தடைகள் மற்றும் எரிசக்தி சந்தை நிலையற்ற தன்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
