அலிபாபா (Alibaba), பைடு (Baidu) மற்றும் BYD உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களை ராணுவத் தொடர்பு காரணமாக கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவுக்கு, 46 அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.
Summary
அமெரிக்க தடை நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்காவின் 10 ராணுவத் தளவாட நிறுவனங்களுக்கு இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்கள் ஏற்றுமதியைத் தடை செய்து, லாக்ஹீட் மார்ட்டின், ரேதியான் உள்ளிட்ட 46 நிறுவனங்களை அரசு கொள்முதல் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. மூன்றாம் நாடுகள் வழியாகவும் இத்தகைய பொருட்கள் மாற்றப்படுவதைத் தடுக்க சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ராணுவத்திற்கு உதவி செய்வதாகக் கூறி, பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா மற்றும் இணைய தேடல் நிறுவனமான பைடு மற்றும் பிஒய்டி கோ (BYD Co.) உள்ளிட்ட முன்னணி சீன நிறுவனங்களை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகன் அதன் கறுப்புப் பட்டியலில் (Chinese Military Companies List) சேர்த்தது. இதனால் இந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்வது மற்றும் அமெரிக்காவில் ஒப்பந்தங்களை மேற்கொள்வது பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

alibaba
அலிபாபா (Alibaba), பைடு (Baidu) மற்றும் புகழ்பெற்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD தவிர, NIO மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான Unitree உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் அடங்கும். அமெரிக்க முதலீடுகள் மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்பங்கள் சீன ராணுவத்திற்குப் பயன்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவின் 10 ராணுவத் தளவாட நிறுவனங்களுக்கு ஏற்றுமதித் கட்டுப்பாடுகளை விதித்த சீனா, அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனங்கள் உட்பட 46 அமெரிக்க நிறுவனங்களை அரசு கொள்முதல் செய்வதிலிருந்து நீக்கி அதிரடியாகத் தடை செய்துள்ளது.

red cat drones
அந்த 10 நிறுவனங்களுக்கு ‘இரட்டைப் பயன்பாடு’ (dual-use) கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து சீன நிறுவனங்கள் தடுக்கப்படும் என்று சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது. ராணுவம் மற்றும் ராணுவம் சாராத பயன்பாடுகள் என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடிய பொருட்களே ‘இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்கள்’ (dual-use items) என்று சீனா தெரிவித்துள்ளது.
அத்தகைய பொருட்களைச் சீனாவிலிருந்து, அமெரிக்காவின் தடைகளுக்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு மாற்றுவதிலிருந்து மூன்றாம் நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தடுக்கப்படுவார்கள் என்றும் சீனா கூறியுள்ளது. லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ரேதியான் ஏவுகணைகள் & பாதுகாப்பு உள்ளிட்ட 46 அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அரசாங்க நிறுவனங்கள் பொருட்களை வாங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறியதாக அதிகாரப்பூர்வ சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா – அமெரிக்கா\
சீனாவால் பெயரிடப்பட்ட அந்த 10 நிறுவனங்கள் பின்வருமாறு: கலிபோர்னியாவின் சிமி வேலியில் உள்ள AVEOX; யூட்டாவின் சவுத் சால்ட் லேக்கில் உள்ள Red Cat Holdings மற்றும் Teal Drones; யூட்டாவின் ஸ்பிரிங்வில்லில் உள்ள IMSAR; ரோட் தீவின் பிரிஸ்டலில் உள்ள Jaia Robotics; கொலராடோவின் ப்ரூம்ஃபீல்டில் உள்ள Ball Aerospace & Technologies; விஸ்கான்சினின் ஓஷ்கோஷில் உள்ள Oshkosh Defense; வர்ஜீனியாவின் நார்ஃபோக்கில் உள்ள L3Harris Maritime Services; லாஸ் வேகாஸில் உள்ள MP Materials; மற்றும் ஓக்லஹோமாவின் ஸ்டில்வாட்டரில் உள்ள USA Rare Earth.
