ஆண்டுதோறும் திமுக அரசு வாங்கிய சராசரி கடனைவிட குறைத்து வாங்க முடியுமா என தவெக அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த கடன் 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் உண்மையான கடன் 13.18 லட்சம் கோடியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டது. வருவாய் பற்றாக்குறை கொரோனா பெருந்தொற்று ஆண்டைவிட அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதாகவும், சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தங்கம் தென்னரசு
நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில், அதுதொடர்பாக திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். முன்பிருந்த அதிமுக ஆட்சி முடிவில் 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், திமுக ஆட்சியில் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டதாக கூறுவதாகவும், தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமடங்கு கடன் உயர்வு விகிதம் தொடர்ந்துவரும் என்றும் தெரிவித்துள்ளார். திமுக அரசின் திட்டங்களுடன், தவெகவின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, கடன் அளவையும் குறைத்துக் காட்டினால், தமது பொறுப்பிலிருந்து விலகத் தயார் எனவும் தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார்.
