மாநிலங்களவையில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பாஜக விரைவில் தொடவுள்ளது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Summary
இந்திய மாநிலங்களவையில் 27 எம்.பிக்களின் காலாவதி, ராஜினாமா காரணமாக நடந்த தேர்தலில் 24 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு; மீதமுள்ள 3 இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் சூழல் உருவாகி, அவர்களின் பலம் 151 ஆக உயர்கிறது. மேற்குவங்கத்தில் திரிணாமூல் எம்.பிக்கள் ராஜினாமா செய்தால், மேலும் 12 இடங்கள் பாஜக வசமாகி, மாநிலங்களவையில் 163 எம்.பிகளுடன் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை தொடும் நிலை உருவாகலாம்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 27 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும், சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையிலும் அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 24 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில், 3 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றவுள்ளது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 19 பேர் தேர்வாகியுள்ள நிலையில், தேர்தல் நடக்கும் 3 இடங்களையும் பாஜக கூட்டணியே கைப்பற்றும் நிலை உள்ளது. இதனால் தற்போது மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 151 ஆக அதிகரிக்கும்.

அதே போல மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் சிலர் ராஜினாமா செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களும் பாஜகவின் பக்கம் உள்ள நிலையில், இந்த பதவிகளையும் பாஜகவே கைப்பற்றும் நிலை தற்போது உள்ளது.
மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் 10 எம்.பிக்கள் உள்ள நிலையில் அவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகையில் அந்த பதவிகளுக்கு தேர்தல் நடந்தால் அதில் 12 எம்.பி பதவிகளை பாஜக கைப்பற்றும் நிலை உள்ளது. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 163 ஆக அதிகரிக்கும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே ஒரே நாடு – ஒரே தேர்தல் உள்ள அரசியமைப்பு சட்ட திருத்தங்களை மேற்கொள்ளமுடியும். மாநிலங்களவையில் இந்த 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற 163 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், வரும் காலங்களில் அந்த எண்ணிக்கையை பாஜக எட்ட வாய்ப்புள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அதே நேரம் அரசியமைப்பு சட்ட திருத்தங்களை மேற்கொள்ள இரு அவைகளிலும் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் நிலையில், மக்களவையில் அந்த எண்ணிக்கை பாஜக கூட்டணிக்கு இல்லாத நிலை உள்ளது.

மக்களவையில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 363 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணிக்கு 293 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பிக்கள் 20 பேர் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் கூட அந்த எண்ணிக்கை 313 ஆக மட்டுமே உயரும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை பெற்று 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை நெருங்கியது. ஆனால் அப்போது மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரம் தற்போது மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைக்கவுள்ள நிலையில், மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
