I-N-D-I-A கூட்டணியின் கூட்டம் வரும் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் இதில் திமுக தொண்டர்களின் மனவேதனையைப் புரிந்து கொண்டு திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளது.
திமுக நாளேடான ‘முரசொலி’யில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தவெகவுடன் கூட்டணி வைத்து ராகுல் காந்தி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளதாக முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அது, ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் முதலாவதாக ஆதரவு கொடுத்தது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அதிலிருந்து விலகி தவெகவுடன் இணைந்துகொண்டது. இதை திமுக கடுமையாக விமர்சித்தது. இதைத் தொடர்ந்து, I-N-D-I-A கூட்டணியின் கூட்டம் வரும் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் இதில் திமுக தொண்டர்களின் மனவேதனையைப் புரிந்து கொண்டு திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளது. இந்த நிலையில், திமுக நாளேடான ‘முரசொலி’யில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தவெகவுடன் கூட்டணி வைத்து ராகுல் காந்தி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளதாக முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தன்னிச்சையான, ஆணவப் போக்கால், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி குழிதோண்டிப் புதைத்து வருவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. திமுகவிடம் காங்கிரஸ் விலை போய்விட்டதாக முன்பு கூறிய விஜய், தற்போது சில பலகோடிகள் கொடுத்து ஆதரவைப் பெற்றுள்ளாரா? இதில் ராகுலின் பங்கு எவ்வளவு? ஒரு ராஜ்யசபா பதவிதான் அதற்கான விலையா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. தான் பிரதமராக வேண்டும் என்பதைவிட, பிரவீன் சக்கரவர்த்தியை ராஜ்யசபை உறுப்பினராக்க வேண்டும் என்பதுதான் ராகுலின் கனவா என வினா தொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்த மு.க.ஸ்டாலினை, ‘சகோதரர்’ என்று ராகுல் பேசியதெல்லாம், நாடகமாகவே தெரிவதாக முரசொலி சந்தேகம் எழுப்பியுள்ளது. இத்தனைக்குப் பிறகும் இந்தியா கூட்டணியில் திமுக இருக்கிறது என காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுவது வெட்கக்கேடானது என முரசொலி கடிந்துள்ளது.
முரசொலியின் இந்த விமர்சனத்துக்கு பாரதிய ஜனதாவுடன் ஒட்டியுறவாடவே திமுக தற்போது காங்கிரஸ் மீது விஷ வார்த்தைகளைக் கொட்டி வருவதாகக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்துச் சுயபரிசோதனை செய்யாமல் ராகுல் காந்தியை திமுக விமர்சிப்பது, அதன் தோல்வியை மறைக்கும் முயற்சி என அவர் சாடியுள்ளார். முந்தைய தேர்தலில் 131 இடங்களில் வெற்றிபெற்ற திமுக, தற்போது 59 இடங்களாகக் குறைந்தது ஏன் என்பது குறித்து அக்கட்சித் தலைமை சிந்திக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தோல்விகளை அரசியல் முதிர்ச்சியுடன் எதிர்கொண்டவர் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ள அவர், உதயநிதி தலைமையிலான திமுகவால் இந்த ஒரு தோல்வியைக்கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை என விமர்சித்துள்ளார். அதிகாரத்திற்காகவோ, பதவிக்காகவோ கொள்கையை விற்காத ராகுல் காந்தியைப் பற்றிப் பேச திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும், திமுக தனது தவறை உணர்ந்து சுயபரிசோதனை செய்யாவிட்டால் அதன் வீழ்ச்சி மேலும் வேகமாகும் எனவும் மாணிக்கம் தாகூர் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
