ஐபிஎல் தொடரில் யாரும் படைக்காத பெரும் சாதனை ஒன்றை 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்
Summary
12 வயதில் ரஞ்சி, 13 வயதில் ஐபிஎல் ஏலம் என சாதனைப் பாதை தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டம் காட்டி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். முதல் பந்திலேயே சிக்ஸர், சன்ரைசர்ஸ் மீது 37 பந்தில் சதம், இப்போது 16 ஆட்டங்களில் 776 ரன்கள், 73 சிக்ஸர்கள் என 15 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளார்.
12 வயதிலேயே பீகார் மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, 13 வயதிலேயே ஐபிஎல் அணியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வரும் அவர் தனது அதிரடி ஆட்டத்தால் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
தனது முதல் ஐபிஎல் போட்டியில், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவர், தற்போது வரை உலகின் அத்தனை முக்கிய பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிதறடித்து வருகிறார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 37 பந்துகளில் அவர் சதமடித்தது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

சூர்யவன்ஷி
குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அசுர பார்மில் இருக்கும் அவர் ராஜஸ்தான் அணியை கிட்டத்தட்ட தனியாளாக தன் தோளில் சுமந்து அணியை பிளே ஆஃப் தொடருக்கு கொண்டுவந்துள்ளார். இந்த சூழலில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி, 47 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அதோடு இந்த போட்டியில் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 700 ரன்களை தாண்டி ஐபிஎல் வரலாற்றில் யாரும் படைக்காத பெரும் சாதனையை படைத்துள்ளார். இதுவரை Uncapped players என அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத யாரும் ஐபிஎல் தொடரில் 700 ரன்களை குவித்தது இல்லை.

ஆனால் வெறும் 15 வயதே ஆன சூர்யவான்ஷி இந்த தொடரில் 16 ஆட்டங்களில் 776 ரன்களை குவித்துள்ளார். அதோடு இந்த தொடரில் 73 சிக்ஸர்களை விளாசி ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையையும் அவர் தகர்த்துள்ளார்.
