பிரேதப் பரிசோதனை அறையில் மனித உடல் உறுப்புகளை தெருநாய்கள் தின்ற சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Summary
பீகார் சஹர்சா மாவட்ட மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மனித உடலின் உள்ளுறுப்புகளை தெருநாய்கள் தின்றுக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் அதிர்ச்சி, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறையினுள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மனித உடலின் உள்ளுறுப்புகளை, தெருநாய்கள் தின்று கொண்டிருந்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பொதுவெளியில் வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Saharsa’s sadar hospital
சந்தேகத்திற்குரிய அல்லது இயல்புக்கு மாறான மரணங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகளின்போது, உடலின் உள்ளுறுப்பு மாதிரிகள் பிரேதப் பரிசோதனை அறையினுள் பதப்படுத்தி வைக்கப்படுகின்றன. மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக, மருத்துவர்கள் உடலுறுப்புகள் மற்றும் திசு மாதிரிகளைச் சேகரித்து, அவற்றை முத்திரையிட்ட பிறகு தடயவியல் அறிவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் வீடியோவில் காணப்படும் உடல் உறுப்புகள் தற்போது நடைபெற்று வரும் காவல்துறை விசாரணைகளுடன் தொடர்புடைய மிக முக்கியமான தடயவியல் சான்றுகளாக இருக்குமோ என்றும், அவை இந்த நாய்களால் சிதைக்கப்பட்டிருக்குமோ என்றும் கவலைகளை எழுப்பியுள்ளது.

Saharsa’s sadar hospital
இவ்விவகாரம் குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்த சஹர்சா சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ் நாராயண் பிரசாத், சமீபத்தில் சேகரிக்கப்பட்ட உடலுறுப்பு மாதிரிகள் (viscera samples) உடனடியாகக் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால், அந்த அறையில் காணப்பட்ட மாதிரிகள் பல ஆண்டுகள் பழமையானவை போலத் தெரிகின்றன என்றும் நாங்கள் தற்போது அந்த அறையைப் பூட்டிவிட்டோம்\, இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
