இளையராஜாவின் காப்பிரைட்ஸ் நகர்வை கேலி செய்ததை எதிர்த்து பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய படம் `கருப்பு’. த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்திருந்த இந்தப் படம், மே 15ஆம் தேதி வெளியானது. இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.60 கோடியும், உலக அளவில் ரூ.147 கோடியும் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஒரு காட்சியில் இளையராஜா `சிவப்பு மல்லி’ படத்தில் இசையமைத்திருந்த `போராடடா’ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. அக்காட்சியின் முடிவில் `பாட்ட நிறுத்துங்கடா இளையராஜா காப்பிரைட்ஸ் கேட்டு கேஸ் போட்ற போறாரு’ என ஆர் ஜே பாலாஜி ஒரு வசனத்தைச் சொல்வார்.
தன்னுடைய உரிமையைப் பெறுவது ஜனநாயக நாட்டில் அடிப்படை விஷயம். அதை நையாண்டி செய்யும் நோக்கில் இப்படி ஒரு வசனம் வைக்கப்பட்டுள்ளது என இளையராஜாவின் காப்பிரைட்ஸ் நகர்வைக் கேலி செய்ததை எதிர்த்து பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் அதற்கு விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது. அதில், “தலைமுறை தலைமுறையாக உத்வேகம் அளித்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்திய சினிமா மற்றும் இசைக்கு மேஸ்ட்ரோ இளையராஜா ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக, தனது மனமார்ந்த மரியாதையையும் போற்றுதலையும் தெரிவித்துக் கொள்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
’கருப்பு’ படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட வசனம், அவருக்குக் கவலையையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம். அந்த வசனம், இத்தகைய உணர்வுகளுக்கு வழிவகுத்தமைக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். இளையராஜாவையோ, அவரது பங்களிப்பையோ அல்லது அவரது உரிமைகளையோ எந்த வகையிலும் புண்படுத்துவதோ, காயப்படுத்துவதோ அல்லது அவமதிப்பதோ எங்களின் நோக்கம் கிடையாது. அது நையாண்டியான சூழலின் ஒரு பகுதியாகவே அமைந்தது.

IlaiyaraajaKaruppu
அது அவரை நோக்கிய ஒரு தனிப்பட்ட கருத்தாக உருவாக்கவில்லை. இருப்பினும், நாங்கள் அவரது உணர்வுகளுக்கு ஆழ்ந்த மதிப்பளித்து மரியாதை அளிக்கிறோம். எங்கள் மரியாதையின் வெளிப்பாடாக, திரைப்படத்தின் எதிர்காலப் பதிப்புகளிலும் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடிவு செய்துள்ளோம். எங்கள் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதோடு, என்றும் அவர் மீதான எங்கள் மரியாதை தொடரும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
