
கம்ப்யூட்டர், லேப்டாப் என அனைத்து கணினி சார்ந்த பொருட்களுக்கும் தேவையான சிப்கள், சிபியு, ஜிபியு உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கி உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தது இன்டெல். நம்முடைய லேப்டாப்கள், கணினி என எங்கு பார்த்தாலும் இன்டெல் ஸ்டிக்கர் ஒட்டாமல் இருக்காது. அந்த அளவுக்கு புகழ்பெற்றது இன்டெல் நிறுவனம்.
கடந்த சில ஆண்டுகளாக இன்டெல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இன்டெல் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொள்ளாமல் பழைய முறையிலேயே இருந்து வந்தது. இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த என்விடியா நிறுவனம் ஏஐ சார்ந்த சிப்புகள் தயாரிப்பில் படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போது உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக மாறியிருக்கிறது.
இன்டெல் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. சிலிக்கான் வேலியின் அடையாளமாக திகழ்ந்த இன்டெலுக்கா இந்த நிலைமை என பேசப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் இன்டெல் நிறுவனத்தை காப்பாற்றும் நோக்கில் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அது தற்போது பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.
கடந்த மாதம் தான் அமெரிக்க அரசாங்கம் இன்டெல் நிறுவனத்தில் 10% பங்குகளை தங்களுக்கு சொந்தமானதாக மாற்றியது. இதனை அடுத்து என்விடியா நிறுவனம் இன்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் நிறுவனத்தை தூக்கி விட வேண்டும் என டிரம்ப் தரப்பில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனை ஏற்றும் என்விடியா நிறுவனம் இன்டெல் நிறுவனத்தில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான உடனே இன்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 25 சதவீதம் உயர்ந்து 31.25 டாலர்கள் என வர்த்தகமானது. தற்போது இன்டெல் நிறுவனத்தில் அமெரிக்க அரசு ஒரு பங்குதாரராக இருக்கிறது , ஜப்பானை சேர்ந்த சாஃப்ட் பேங்க் ஒரு பங்குதாரராக இருக்கிறது , தற்போது என்விடியா நிறுவனமும் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறது.
இன்டெல் நிறுவனத்தை பொருத்தவரை எதிரியாக கருதப்பட்ட என்விடியா நிறுவனமே அதில் முதலீடு செய்ய முன் வந்திருப்பது மிகப்பெரிய ஒரு கேம் சேஞ்சர் என இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இன்டெல் நிறுவனத்திற்கும் , நிறுவன முதலீட்டாளர்களும் இத்தனை ஆண்டுகளாக அனுபவித்து வந்த வழி வேதனைகளுக்கெல்லாம் முடிவு கிடைத்து விட்டது என பலரும் தெரிவிக்கின்றனர்.
இன்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் என்விடியா நிறுவனம் ஏஐ சிப் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் உதவி செயியன் தேவையான உதவிகளை வழங்கும் என தெரிவித்தருக்கிறது. அடுத்த தலைமுறை கம்ப்யூட்டிங்கிற்கு தேவையான அடித்தளத்தை இன்டெலும் என்விடியாவும் சேர்ந்து வழங்கும் என என்விடியா தலைமை செயல் அதிகாரி ஜென் சென் ஹூவாங் தெரிவித்திருக்கிறார்.