தமிழ்நாடு தேர்தல் முடிவுக்கான கருத்துக்கணிப்பில் தவெகவிற்கு 35% வரை வாக்குசதவீதமும், 98 முதல் 120 சீட்டு வரை கிடைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு அரசியல் களத்தில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
Summary
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் தவெக, தனது முதல் தேர்தலில் தமிழகத்தில் 98-120 இடங்களை வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது.

தவெக தலைவர் விஜய்
பெரும்பாலான நிறுவன கருத்துக் கணிப்புகள் திமுகவே மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில், டைம்ஸ் நவ், வோட் வைஃப் ஆகிய நிறுவன கருத்துக் கணிப்புகள் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. இப்படி இருக்க ஆக்சிஸ் மை இந்தியாவின் கணிப்பு தற்போது கவனம் பெற்றுவருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போதும் வாக்கு எண்ணிக்கை நாளன்று உண்மையான முடிவுகளாக வெளிப்படுவதில்லை என்றாலும், அவை பெரும்பாலும் பொது விவாதத்தை வடிவமைத்து, இறுதித் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.
இந்நிலையில், ஆக்சிஸ் மை இந்தியாவின் முந்தைய கணிப்புகள் எவ்வளவு துல்லியமாக இருந்து இருக்கிறது. எந்தெந்த தேர்தலில் கணிப்பு தவறி இருக்கிறது என பார்க்கலாம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
Axis My India கடந்த 11 முதல் 12 ஆண்டுகளில், சுமார் 93 சதவீத துல்லியத்துடன் தேர்தல் முடிவுகளை கணித்துள்ளதாக இந்த அமைப்பு தானே கூறியுள்ளது. மொத்தம் 80 தேர்தல்களில், 63 முதல் 65 தேர்தல்களின் முடிவுகளை சரியாக கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2019, 2022
2019-ல், உத்தரப் பிரதேசத்தில் நிலவிய மகா கூட்டணியின் காரணமாக, பாஜக தனித்து பெரும்பான்மை பெறுவதற்குப் போராடும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பாளர்கள் குறிப்பிட்டனர். ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டுமே, தேசிய ஜனநாயகக் கூட்டணி 339 முதல் 365 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், பாஜக தனித்து 300 இடங்களை எளிதாகக் கடந்துவிடும் என்றும் தைரியமாகக் கணித்தது. NDA கூட்டணி 353 இடங்களில் (பாஜக மட்டும் 303 இடங்களை வென்றது) வெற்றி பெற்றது. அதேபோல், 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் AAP கட்சிக்கு 76 முதல் 90 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அக்கட்சி 92 இடங்களை கைப்பற்றியது.

2023, 2025
2023 மத்தியப் பிரதேசத் தேர்தலில் BJP கட்சிக்கு 140 முதல் 162 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டது. இறுதியில் BJP 163 இடங்களை வென்றது. 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் BJP-க்கு 45 முதல் 55 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 48 இடங்கள் கிடைத்தது. இதற்கிடையில், மணிப்பூர், உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலத் தேர்தல்களிலும் கணிப்புகள் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 2025 டெல்லி தேர்தலில், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் போட்டி நிலவும் அல்லது சொற்ப வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று கணித்திருந்தன. ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக, 45 முதல் 55 இடங்களில் பாஜக தீர்க்கமான வெற்றியைப் பெறும் என்று கணித்திருந்தது. அதன்படி பாஜக 48 இடங்களை வென்று, தலைநகரில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பத்தாண்டு கால தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

2024
ஆனால், அனைத்து கணிப்புகளும் சரியாக இருந்ததில்லை. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் இந்த அமைப்பின் கணிப்பில் பெரிய தவறாகக் கருதப்படுகிறது. NDA கூட்டணிக்கு 361 முதல் 401 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், உண்மையில் NDA 293 இடங்களையே பெற்றது. வெற்றி பெற்ற கூட்டணியை சரியாக கணித்தாலும், பெரும்பான்மையின் அளவை கணிக்க முடியாமல் போனது.
இந்தத் தவறுக்கான காரணங்களாக, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் வாக்காளர்களின் அமைதியான மாற்றங்கள், குறைந்த வாக்குப்பதிவு மற்றும் சிறு கட்சிகளின் தாக்கம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல், 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில், NDAக்கு குறைந்த முன்னிலை இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 202 இடங்களில் வெற்றிபெற்றது. இதற்கு முன் 2014 மக்களவைத் தேர்தலிலும் BJP தனிப்பட்ட பெரும்பான்மையை அடையும் திறனை குறைவாக மதிப்பிட்டிருந்த நிலையில் அக்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இப்படி கணிப்புகள் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் நிலவரம் மே 4 அன்று தெரியவரும்.
