வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி புளோரஸும் அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும்
அமெரிக்காவின் ரகசிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்,
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளார். அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதித்துறையின்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசுலா அதிபராக இருந்த மதுரோ கைது!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை தலைநகர் கராகஸில், அமெரிக்க விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி புளோரஸும் அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டு, இந்த வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.

மதுரோ, ட்ரம்ப்
பந்தயம் கட்டிய ராணுவ வீரர்
இந்த நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் அமெரிக்காவின் ரகசிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்பே, அதுகுறித்து பந்தயம் கட்டியதாகக் கூறப்படும் கேனன் கென் வான் டைக் என்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
ரகசியத்தை வெளியிட்டு ரூ.3.3 கோடி சம்பாதித்த ராணுவ வீரர்
அந்த அறிக்கையின்படி, மதுரோவைப் பிடிக்கும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த டைக், மதுரோவின் கைது நேரம் குறித்த ரகசியத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாலி மார்க்கெட்டில் வர்த்தகம் செய்து 4,00,000 டாலருக்கும் (இந்திய மதிப்பில் ரூ.3.3 கோடி) அதிகமாக சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையின்படி, மதுரோவைப் பிடிப்பதற்காக ’ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ என்று அறியப்பட்ட ஒரு ராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் அவர் ஈடுபட்டதாகவும், அந்த நடவடிக்கை குறித்த உள்விவரங்களை லாபம் ஈட்டுவதற்காகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2025 டிசம்பர் 8 முதல் ஜனவரி 6 வரை, அந்த நடவடிக்கை தொடர்பான முக்கியமான, பொதுவில் வெளியிடப்படாத தகவல்களை அணுகும் வாய்ப்பு அவருக்கு இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி டிசம்பர் 27, 2025 மற்றும் ஜனவரி 26-க்கு இடையில், வான் டைக் சுமார் 13 பந்தயங்களைக் கட்டி, இத்தகைய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவரது கணிப்புகள் சரியாக நிரூபிக்கப்பட்டதால், அவர் 400,000 டாலருக்கும் மேல் சம்பாதித்தார் என அரசு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் அந்தப் பணத்தைப் பெற்ற பிறகு, அதில் பெரும்பாலான தொகையை ஒரு வெளிநாட்டு கிரிப்டோகரன்சி பாதுகாப்புப் பெட்டகத்திற்கு மாற்றி, பின்னர், அங்கிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. வட கரோலினாவின் ஃபேட்வில்லில் அமைந்துள்ள ஃபோர்ட் பிராக் என்ற இராணுவத் தளத்தில் பணியாற்றி வரும் அமெரிக்க ராணுவ வீரரான வான் டைக் மீது, சட்டத்தை மீறியதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீதித்துறையின்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
