முதல்வர் இருக்கும் மேடையிலேயே தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கலாச்சாரம் பெருகியிருக்கிறது என்று சொல்லக்கூடிய வீரப்பெண்மணியாகவே பிரமேலதாவை பார்ப்பதாக சுந்தர்.சி பேசியுள்ளார்.
Summary
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி, திமுக கூட்டணியில் இருந்தாலும், பிரேமலதா வெளிப்படையாக அதிமுக கூட்டணிக்கு உதவுவதாகக் கூறி, அவரை தைரியமிக்க வீரப்பெண் எனப் புகழ்கிறார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சுந்தர்.சி
இந்தசூழலில் புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் என ஒதுக்கியிருந்த நிலையில், அதிமுக ஒதுக்கிய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சி போட்டியிடுகிறார்.
மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளராக திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக விமர்சித்தார்.
பிரேமலதாவை புகழ்ந்த சுந்தர்.சி..
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளர் சுந்தர்.சி, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்து, மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், மதுரை மத்திய தொகுதியில் மட்டும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை. இது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்குச் சொந்தக் கட்சியிலேயே எந்தளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
படித்தவர், அறிவாளி என்று தற்பெருமை பேசிக் கொள்ளும் இவரை ஏன் நிதியமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் தூக்கினார்? அதுமட்டுமின்றி, கட்சிப் பதவியான ஐ.டி விங் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு, இவருக்குக் கீழ் இருந்த ஜூனியரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலும் சரி, கட்சியிலும் சரி இவருடைய செயல்பாடு முதலமைச்சருக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. தனது சொந்தக் கட்சியிலேயே செல்வாக்கு இல்லாத ஒருவரால், வெற்றி பெற்றால் மட்டும் இந்தத் தொகுதிக்கு எப்படி நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்க முடியும்” என விமர்சித்தார்.
மேலும் பிரேமலதா குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “ வெளில திமுக கூட்டணியில் இருந்தாலும் உள்ளே அதிமுக கூட்டணிக்காக தான் உதவி பன்றதா நான் நினைக்கிறேன். ஏன்னா நாங்க பேசவேண்டியத எல்லாம் அவங்க பேசியிருக்காங்க. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கஞ்சா கலாச்சாரம் பெருகியிருக்கிறது என முதலமைச்சர் இருக்கக்கூடிய மேடையிலேயே பேசக்கூடிய தைரியமிக்க வீரப்பெண்மணியாக தான் அவரை பார்க்கிறேன். மதுரை மத்திய தொகுதியை நீங்கள் பார்த்தாலே தெரியும் இருக்கின்ற அனைத்து தெருக்களிலும் லைட் எரியல. அப்போ பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும், கஞ்சா புழக்கமும் இங்க அதிகமா இருக்கு. நான் வெற்றிபெற்றால் இருக்கும் அனைத்து தெருக்களிலும் லைட் போட்டு, சிசிடிவி கேமராக்கள் பொறுத்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்’ என்று பேசியுள்ளார்.
