”மாப்பிள்ளை அவர்தான், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்பது போலத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பழனியில் உள்ளது” என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. தொடர்ச்சியாக, 2-ஆவது முறை வெற்றிபெறும் நோக்கில் செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம், விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட 16 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதேசமயம், சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் எனத் தனித்து நிற்கின்றன. இதையடுத்து, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவி வருகிறது.

அரசியல் தலைவர்கள் பரப்புரை
இந்த சூழலில்தான், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளின் மூலம் தமிழ்நாடு தேர்தல் களம் அனல் பறக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எந்த தொகுதிகளும் ஒதுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியிருந்ததாக அண்ணாமலை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில்தான் இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். திமுக கூட்டணி சார்பில் சிபிஐ(எம்) கட்சியைச் சார்ந்த என்.பாண்டி இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில்தான், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும், திமுக குறித்தும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பழனியில் அண்ணாமலைPt web
அண்ணாமலை பேசுகையில், “ஓராண்டுக்கு 200 கோடி வருமானம் வரும் கோயில், 1500 கோடி சொத்துக்கள் இருந்தும் பழனி இன்று குப்பைமேடாக உள்ளது. மத்திய அரசின் தூய்மைப் பட்டியலில் 585-ஆவது இடத்திற்குப் பழனியைத் தள்ளியதுதான் திமுகவின் சாதனை. வையாபுரி குளம் மற்றும் சண்முக நதியைச் சாக்கடைகளாக மாற்றிவிட்டனர். 10 ஆண்டுகாலம் எம்எல்ஏ-வாக இருந்து பழனியை முழுவதுமாக நாசம் செய்துவிட்டு, இப்போது பயத்தில் திண்டுக்கல் தொகுதிக்கு ஓடிவிட்டார் ஐ.பி. செந்தில்குமார். பழனி திமுக கூட்டணி வேட்பாளர் என்.பாண்டி, திண்டுக்கல்லில் இரண்டுமுறை தோற்று எக்ஸ்போர்ட் ஆகி வந்தவர். ‘மாப்பிள்ளை அவர்தான், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது’ என்பது போலத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பழனியில் உள்ளது. திமுகவிடம் இருந்து பணம் வாங்கத் தொடங்கியதுமே கம்யூனிஸ்டுகளின் மதிப்பும் மரியாதையும் போய்விட்டது. இந்தியா முழுவதுமே மக்கள் அவர்களை நிராகரிக்கத் தொடங்கிவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
