மனித மூளையை மிஞ்சும் ஏஐ அபாயம் இருப்பதால் கட்டுக்குள் வைக்க அவசர ‘கில் ஸ்விட்ச்’ தேவை என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
Summary
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏஐ கட்டுப்பாட்டை இழந்தால் வங்கித் துறை முதல் தேசிய பாதுகாப்பு வரை கடும் அபாயம் ஏற்படும் என எச்சரித்து, அவசர காலத்தில் ஒரே நொடியில் ஏஐயை நிறுத்தும் Kill Switch அவசியம் என வலியுறுத்துகிறார். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ‘கிளாட் மிதோஸ்’ மாடல், சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் இந்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
மனித மூளையை மிஞ்சும் வகையில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒருகட்டத்தில் மனித இனத்திற்கே சவாலாக மாறிவிடுமா? என்ற கேள்வி தற்போது உலகளவில் எழுந்துள்ளது. குறிப்பாக, “எல்லாம் கைமீறிச் செல்லும்போது ஏஐ (AI) தொழில்நுட்பத்தை ஒரே நொடியில் அணைத்துவிட ஒரு அவசர Kill Switchயை நாம் உருவாக்க வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

donald trump
அதிபர் டிரம்ப், ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க் (Fox Business Network) ஊடகத்தின் ‘Mornings with Maria’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், ஏஐ தொழில்நுட்பத்தின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, வங்கித் துறையின் நிலைத்தன்மையை ஏஐ பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது வங்கி அமைப்புகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றும் அதே வேளையில், அதன் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய இக்கட்டான சூழலில், அரசாங்கத்தின் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளும், அந்தத் தொழில்நுட்பத்தை உடனடியாகச் செயலிழக்கச் செய்யக்கூடிய ‘Kill Switch’ முறையும் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவாதம் இவ்வளவு தீவிரமடைய முக்கியக் காரணம், ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கிளாட் மிதோஸ்’ (Claude Mythos) என்ற புதிய ஏஐ மாடல் ஆகும். இந்த மிதோஸ் மாடல் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், இது எந்தவொரு இணையப் பாதுகாப்பையும் ஊடுருவி சிக்கலான சைபர் தாக்குதல்களை நடத்த வல்லது என்றும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆந்த்ரோபிக் நிறுவனம் இந்த எச்சரிக்கைகள் குறித்துப் நேரடி விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், ‘கிளாட் மிதோஸ் ப்ரிவியூ’ (Claude Mythos Preview) மாடல் தற்போது பொதுமக்களுக்குப் பரவலாகக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.

claude Mythos
இருப்பினும், இந்த ஏஐ மாடலின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசாங்கம் ஆந்த்ரோபிக் நிறுவனத்தை ‘Supply Chain Risk’ பிரிவில் சேர்த்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க மத்திய முகமைகள் இந்த நிறுவனத்தின் கருவிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து டேரியோ அமோடே (Dario Amodei) தலைமையிலான ஆந்த்ரோபிக் நிறுவனம் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கிளாட் மிதோஸ் மாடலானது, முன்னெப்போதும் இல்லாத வகையில் 27 ஆண்டுகள் பழமையான ஓபன் பிஎஸ்டி (OpenBSD) பிழையைத் தானாகவே கண்டறிந்ததுடன், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு ஓட்டைகளை அடையாளம் கண்டுள்ளது. இணையத்தில் உள்ள எந்தவொரு மென்பொருளையும் ஹேக் செய்யும் திறன் இதற்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், Apple மற்றும் Amazon உட்பட 40-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் மென்பொருள் பிழைகளைக் கண்டறிய இதனைப் பயன்படுத்தி வருகின்றன.

SAm Altman , Open AI
இதற்கிடையில், இந்தத் தொழில்நுட்பப் போட்டியில் பின் தங்காமல் இருக்க, சாம் ஆல்ட்மேன் (Sam Altman) தலைமையிலான ஓபன் ஏஐ நிறுவனம், ‘ஜிபிடி 5.4-சைபர்’ (GPT 5.4-Cyber) என்ற மேம்படுத்தப்பட்ட மாடலை உருவாக்கியுள்ளது. இது குறிப்பாக மென்பொருள் பிழைகளைக் கண்டறியவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதீத திறன் கொண்ட ஏஐ கருவிகள் உருவாகி வரும் நிலையில், முறையான அரசு கண்காணிப்பும், அவசர காலக் கட்டுப்பாடுகளும் இருந்தால் மட்டுமே எதிர்காலப் பேரழிவைத் தவிர்க்க முடியும் என டிரம்ப் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
