
சமீப காலமாக பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் எந்த பங்குகளில் முதலீடு செய்வது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இப்படி சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சில பங்குகள் மல்டிபேக்கர்களாக முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்து கொண்டு தான் இருக்கின்றன.
அப்படி, Integrated Industries நிறுவனப் பங்கின் விலை ரூ.0.03 லிருந்து ரூ.24.15 ஆக உயர்ந்து, ஐந்து ஆண்டுகளில் 82,233.33 சதவீதம் வரை லாபத்தை ஈட்டியுள்ளது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு இதில் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி.
கடந்த 2020 செப்டம்பரில் ரூ.0.30 ஆக இருந்த Integrated Industries நிறுவனப் பங்கு, தற்போது பிஎஸ்இ-யில் ரூ. 24.15-க்கு வர்த்தகமாகிறது. இந்த கணக்கீட்டில் போனஸ் மற்றும் பங்குப் பிரிப்புக்குப் பிந்தைய பலன்கள் சேர்க்கப்படவில்லை . கடந்த ஆண்டு ஏப்ரலில் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கிய இந்நிறுவனம், 2024 செப்டம்பர் 1 அன்று ரூ.10-லிருந்து ரூ.1 ஆக பங்குகளைப் பிரித்தது. இதன் காரணமாக, நீண்ட கால முதலீட்டாளர்கள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.
Integrated Industries நிறுவனப் பங்கானது வியாழக்கிழமை பிஎஸ்இ-யில் 8.81 சதவீதம் உயர்ந்து ரூ.24.70 ஆக அதிகரித்தது. இருப்பினும், குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு இது சாதகமானதாக இல்லை, ஏனெனில் கடந்த ஒரு ஆண்டில் இதன் பங்கு மதிப்பு 37 சதவீதம் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, பங்கு மதிப்பு 15.24 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. இது ரூ.29.14 லிருந்து தற்போதைய சந்தை நிலைக்கு வந்துள்ளது.
2025 ஜூன் காலாண்டில், Integrated Industries நிறுவனம் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. நிகர விற்பனை ஆண்டுக்கு 78.29% உயர்ந்து ரூ. 249.85 கோடியாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த வருவாய் ஆகும்.
நிறுவனத்தின் இயக்க லாபம் ரூ.25.51 கோடியாக உயர்ந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் (PBT) ஆண்டுக்கு 77.79% அதிகரித்து ரூ. 24.73 கோடியாகவும், வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 51.7% உயர்ந்து ரூ.19.69 கோடியாகவும் இருந்தது. ஒரு பங்குக்கான வருவாய் (EPS) ரூ. 0.84 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக Integrated Technologies Ltd. என்று அறியப்பட்ட இந்நிறுவனம், 2023 மே மாதம் Integrated Industries Limited எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1995-ல் நொய்டாவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான ஆர்கானிக் மற்றும் இன்ஆர்கானிக் உணவுப் பொருட்கள், பேக்கரி பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.