1962 முதல் 2021 வரை 14 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்த திமுக எத்தனை முறை ஆட்சியிலும் எத்தனை முறை எதிர்க்கட்சியிலும் இருந்தது? திமுகவின் முழு தேர்தல் வரலாறை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
Summary
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் திமுக 14 முறை போட்டியிட்டு, 1962 முதல் 2021 வரை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளது. 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது. 1971இல் 48.58% வாக்குகளுடன் 184 இடங்கள் என அதிகபட்ச சாதனை படைத்ததுடன், 1991இல் 2 இடங்கள் மட்டுமே வென்று மிக மோசமான நிலையும் சந்தித்தது.
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை 14 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள திமுக வென்ற தொகுதிகளையும் பெற்ற வாக்கு சதவீதங்களையும் தற்போது பார்க்கலாம்.

Karunanidhi
1962இல் நடந்த தேர்தலில்தான் முதன்முதலாக அங்கீகாரத்துடன் உதய சூரியன் சின்னத்தில் திமுக போட்டியிட்டது. அத்தேர்தலில் திமுக 27.1% வாக்குகளை பெற்று 50 இடங்களில் வென்றது. 1967இல் 40.69% வாக்குகளை பெற்று 137 இடங்களில் வென்றதுடன் ஆட்சியையும் முதன்முதலாக பிடித்தது. 1971இல் 48.58% வாக்குகள் பெற்ற நிலையில் 184 இடங்களில் வெற்றி கிடைத்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த தேர்தலில்தான் திமுக அதிக தொகுதிகள் வென்று, அதிக வாக்கு சதவீதம் பெற்றது .
1977இல் 24.89% வாக்குகளுடன் 48 இடங்கள் கிடைத்தன. இம்முறை திமுக ஆட்சியை அதிமுகவிடம் இழந்தது. 1980இல் 22.1% வாக்குகளுடன் 37 இடங்களில் திமுக வென்றது. 1984இல் 29.34% வாக்குகள் பெற்ற திமுக 24 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதிமுக இரண்டாக பிளந்திருந்த நிலையில் 1989இல் தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 33.18% வாக்குகளுடன் 150 இடங்களில் வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரியணை ஏறியது.

mk stalin
1991இல் ராஜிவ் படுகொலைக்கு பின் நடந்த தேர்தலில் திமுக 22.46% வாக்குகளை பெற்று 2 இடங்களில் மட்டுமே வென்றது. சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் மோசமான செயல்பாடு இதுவே. 1996இல் 173 இடங்களில் அமோக வெற்றிபெற்ற திமுக 42.07% வாக்குகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது. 2001இல் 31 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்த திமுக 30.92% வாக்குகளை ஈட்டியிருந்தது.
2006இல் 26.46% வாக்குகளுடன் திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றிருந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. 2011இல் 23 இடங்களில் வென்ற திமுக, ஆட்சியை பறிகொடுத்தது. இம்முறை அதற்கு 22.39% வாக்குகள் மட்டுமே கிடைத்தது . 2016இல் 31.4% வாக்குகளுடன் 89 இடங்களில் வென்ற திமுக தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே நீடித்தது.

dmk
மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் மறைவுக்கு பின் 2021இல் தேர்தல் நடைபெற்றது. இம்முறை 133 இடங்களில் வென்று 37.7% வாக்குகளுடன் திமுக 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது.
