
கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமத்தின் பங்குகள்தான் இன்று பங்குச் சந்தையை கலக்கிக் கொண்டுள்ளன. அதற்கு மிகப்பெரிய காரணம் உள்ளது. ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தது, பல போராட்டங்களுக்குப்பின் அந்த விவகாரம் செபி விசாரணைக்கு வந்த நிலையில், கௌதம் அதானி தலைமையிலான குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் பங்கு கையாளுதல் குற்றச்சாட்டுகளை சந்தை ஒழுங்குமுறை ஆணையம் நிராகரித்ததைத் தொடர்ந்து இன்று அதானி குழுமப் பங்குகள் ஹிட் அடிக்கத் தொடங்கியுள்ளனர். இன்று ஒட்டுமொத்தமாக அதானி குழுமப் பங்குகள் 13% மேல் உயர்வை பதிவு செய்துள்ளன. குறிப்பாக அதானி டோட்டல் கேஸ் பங்குகள் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளன.
இன்று அதானி குழும முதலீட்டாளர்களுக்கு லக்கியான நாள் என்றே கூறலாம். ஏனெனில் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் – செபி ஹிண்டன்பர்க் ரிசர்ச் பில்லியனர் கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீதான பங்கு கையாளுதல் குற்றச்சாட்டுகளை நிராகரித்து க்ளீன் சீட் என அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து இன்று பங்குகள் தடாலடியாக உயர்ந்துள்ளன.
பங்குச் சந்தை ஆரம்ப வர்த்தகத்தில் அதானி குழுமப் பங்குகள் 13% வரை உயர்வை பதிவு செய்துள்ளன. அதில் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் அதிக லாபம் ஈட்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.
அதானி குழுமப் பங்குகள் நிலவரம்!
இன்று இக்கட்டுரை எழுதும் நேரத்தில் அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டோட்டல் கேஸ் (Adani Total Gas Ltd) பங்குகள் 8.69% உயர்வுடன் ரூ.659.70-க்கு வர்த்தகமாகி வருகிறது. அதனைத்தொடர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் 1 பங்கு விலை 4.01% உயர்வுடன் ரூ.2,498.40-க்கும், அதானி பவர் பங்குகள் ஒவ்வொன்றும் 7.52% உயர்வுடன் ரூ.678.85-க்கு வர்த்தகமாகி வருகிறது.
அதனைத்தொடர்ந்து Adani Green Energy ஒரு பங்கு விலை இக்கட்டுரை எழுதும் நேரத்தில் 3.20% உயர்வுடன் ரூ.1,010.20-க்கு வர்த்தகமாகி வருகிறது. அதேசமயம் அம்புஜா சிமென்ட் ஒரு பங்கு விலை 0.43% உயர்வுடன் ரூ.583.50-க்கும், adani ports பங்கு விலை 1.70% உயர்வுடன் ரூ.1,436.80-க்கும் வர்த்தகமாகி வருகிறது.
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுகளை நிராகரித்த செபி!
இரண்டு தனித்தனி உத்தரவுகளில், ஒழுங்குமுறை ஆணையம் வழக்கில் எந்த மீறல்களையும் கண்டறியவில்லை என்று SEBI கூறியது. தொடர்பில்லாத தரப்பினருடனான இத்தகைய பரிவர்த்தனைகள் அந்த நேரத்தில் தொடர்புடைய தரப்பினரின் பரிவர்த்தனைகளாக தகுதி பெறவில்லை, ஏனெனில் 2021 திருத்தத்திற்குப் பிறகுதான் வரையறை விரிவாக்கப்பட்டது. கடன்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டன, நிதி எதுவும் திரும்பப் பெறப்படவில்லை, எனவே, மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் எதுவும் நடக்கவில்லை என்று SEBI கூறியது. இதன் அடிப்படையில், அதானி குழுமத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ளன.
ஹிண்டன்பர்க் சுமத்திய சில குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி குழுமத்தை செபி விடுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி தற்போது தனது முதல் பதிலை வெளியிட்டுள்ளார். அதானி குழுமம் எப்போதும் பராமரித்து வந்ததை செபியின் முடிவு உறுதிப்படுத்துகிறது என்று அவர் கூறினார். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை எப்போதும் அதானி குழுமத்தின் செயல்பாடுகளின் அடையாளங்களாக இருந்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
பொய்யான கூற்றுகளைப் பரப்புபவர்கள் இப்போது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்ட கூற்றுகளால் முதலீட்டாளர்கள் சந்தித்த இழப்புகளுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார், இது ஒரு மோசடி என்றும் கூறியுள்ளார்.