FIFA உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளின் விவரம் வெளிவந்துள்ளது.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் மிகப்பெரும் விளையாட்டு தொடராக FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் திகழ்ந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

FIFA World Cup trophy
தொடர்ந்து இந்த ஆண்டு உலககோப்பையை கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஜூன் 11-ம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு உலகக்கோப்பையில் பல்வேறு மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உலக கோப்பையை நடத்தும் அணிகள் மட்டும் நேரடியாக உலககோப்பைக்கு தகுதி பெரும். அதன்படி கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த கால்பந்து தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
பிற அணிகள் கண்டங்கள் வாரியாக நடைபெறும் தகுதி சுற்று போட்டிகளில் விளையாடியே உலககோப்பைக்கு தகுதி பெறமுடியும். இதன்படி ஐரோப்பாவில் இருந்து 16 அணிகளும், ஆசியாவில் இருந்து 8, ஆப்பிரிக்காவில் இருந்து 9, வட அமெரிக்காவில் இருந்து 6, தென் அமெரிக்காவில் இருந்து 6, ஒசியானியாவில் இருந்து 1 அணிக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
அதோடு கண்டங்களுக்கு இடையே நடக்கும் போட்டிகள் மூலம் 2 அணிகள் உலககோப்பைக்கு தகுதி பெரும். இந்த தகுதி சுற்று போட்டிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இதில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் இந்த உலககோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. ஆனால் 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணி இறுதி தகுதி சுற்றுப்போட்டியில் போஸ்னியா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து உலககோப்பைக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு அந்த அணி கடந்த 3 உலககோப்பைகளுக்கும் தகுதி பெற தவறியுள்ள நிலையில், ஒரு ஜாம்பவான் அணியின் சரிவு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உலகக்கோப்பைக்கான ஆசிய தகுதி சுற்றுப்போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறிய நிலையில், கத்தார், சவூதி அரேபியா, ஈரான், உஸ்பெக்கிஸ்தான், தென் கொரியா, ஜோர்தான், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நேரடியாக உலககோப்பைக்கு தகுதி பெற்றன.

Italy upset
ஆஸ்திரேலியா புவியியல் ரீதியாக ஓசியானியா கண்டத்தில் இருந்தாலும், அந்த அணி ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் இணைந்துள்ளதால் ஆசிய பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ளது. அதே போல கண்டங்களுக்கு இடையேயான இறுதி தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதில் ஈராக் அணி பொலிவியா அணியை வீழ்த்தி 48 மற்றும் இறுதி அணியாக உலககோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
ஈராக் கடைசியாக 1986-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக்கோப்பையில் விளையாடியது. அதற்குப் பிறகு சரியாக 40 ஆண்டுகள் கழித்து, இப்போது 2026 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது அந்நாட்டில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் போன்ற அணிகளும், பலருக்கு பெயரே தெரியாத கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகளும் முதல் முறையான இந்த முறை கால்பந்து உலககோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. அதே போல ஹைட்டி, டி.ஆர். காங்கோ அணிகள் 52 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உலகக்கோப்பையில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன.

அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஈரான் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், ஈரான் திட்டமிப்படி இந்த தொடரில் பங்கேற்கும் என FIFA அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பே, லாமின் யாமால், ஹரி கேன், நெய்மார், எர்லிங் ஹாலண்ட், வினிசியஸ் ஜூனியர் போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
