எந்த கேப்டன் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ, அந்த கேப்டன்சியின் கீழ் தான் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று முன்னாள் இந்திய கேப்டன் கூறியுள்ளார்..
Summary
2026 ஐபிஎல் தொடக்கப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி கண்டது. நட்சத்திர வீரர்கள் இருந்தும் 127 ரன்களில் சிஎஸ்கே சுருண்ட நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தவறான முடிவுகள் காரணமாக விமர்சனத்துக்கு உள்ளாகிறார். இடதுகை ஓப்பனர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னரை பயன்படுத்தாதது கேப்டன்சியை கேள்விக்குறியாக்க, ஸ்ரீகாந்த் ஸ்பின்னர்கள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெவால்ட் பிரேவிஸ், தோனி போன்ற வீரர்கள் ஓய்வில் இருந்தாலும் சென்னை அணியில் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்திற்கு குறைவே இல்லை என்றபோதிலும், வெறும் 127 ரன்களை மட்டுமே அவர்களால் அடிக்க முடிந்தது.

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட் பேட்ஸ்மேனாக சொதப்பியதோடு மட்டுமில்லாமல், கேப்டனாகவும் பல தவறான முடிவுகளை எடுத்தார். 2 இடது கை வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக விளையாடும்போது ஆஃப் ஸ்பின்னரை பயன்படுத்தாது ருதுராஜ் கேப்டன்சியை கேள்வி எழுப்புகிறது.
முன்னாள் இந்திய கேப்டனான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேப்டன் ருதுராஜ் ஸ்பின்னர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று கூறினார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய சீக்கா, “ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கையே இல்லாமல் இருக்கிறார். எந்த கேப்டன் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ, அந்த கேப்டன்சியின் கீழ் தான் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அதனால் ருதுராஜ் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

சஞ்சு சாம்சன்
அதேபோல பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை, கடந்த சீசனில் தொடக்க வீரராக ஆயுஸ் மாத்ரே சிறப்பாக விளையாடிய போது ஏன் மாற்றவேண்டும். ஆயுஸ் மாத்ரே, சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாகவும், கெய்க்வாட் நம்பர் 3 வீரராகவும் விளையாட வேண்டும். சிஎஸ்கே அணியிடம் சரியான மைண்ட்செட் இல்லை, அவர்கள் தோல்வியை மறந்துவிட்டு சரியான பேட்டிங் ஆர்டர் உடன், பேட்டிங்கில், ஆடுகளத்தை பொறுத்து அப்ளிகேசன் செலுத்தி விளையாட வேண்டும்” என்று கூறினார்.
