
தங்கம் விலை ஏற்றம் குறித்து தான் உலகமே பேசி வருகிறது . பாதுகாப்பான முதலீடு அனைத்து காலத்திற்கும் வளர்ந்து நிற்கும் முதலீடு என ஒரு சாமானிய குடும்பம் தொடங்கி ஒரு நாட்டின் மத்திய வங்கி வரை அனைவருமே சேர்த்து வைக்கக் கூடிய ஒரு பொருளாக தங்கம் தொடர்ந்து தன்னை முதல் இடத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது.
நம்பர் 1 இடத்தில் தங்கம்: பங்குச்சந்தை, கிரிப்டோ கரன்சிகள் என பல முதலீட்டு கருவிகள் இருந்தாலும் இன்றும் தங்கம் தான் முதலீட்டாளர்களின் நம்பர் ஒன் சாய்ஸாக இருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதற்கு சான்றாகவே தரவுகளும் வெளிவந்துள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதே இதற்கு சான்று
7 ஆண்டுகளில் எவ்வளவு உயர்வு: இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் சராசரியாக 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை எவ்வளவு என்பதையும் 2024-25ஆம் ஆண்டில் சராசரியாக 10 கிராம் தங்கத்தின் விலையும் ஒப்பிட்டாலே இது நமக்கு புரிந்து விடும். சராசரி என்பது ஓராண்டுக்கான விலையின் சராசரி ஆகும். அதன்படி இந்தியாவில் 2018- 19 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை சராசரியாக 31,193 ரூபாயாக இருந்தது. அதுவே 2024- 25 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை இந்தியாவில் சராசரியாக 75, 842 ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
ரூ.1 லட்சம் முதலீடு: இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு 143 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது. அதாவது 2018-19ஆம் ஆண்டில் 1 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு சராசரியாக 2.43 லட்சம் ரூபாய் ஆகும். இந்தியாவில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு மட்டுமில்லாமல் நம் கலாச்சாரத்தோடும் நம் அன்றாட வாழ்க்கையுடனும் தொடர்புடைய ஒரு உலோகமாக இருக்கிறது. எனவே உள்நாட்டு தேவையும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைகிறது.
லண்டன் நகருடன் ஒப்பீடு: திருமணத்தில் தொடங்கி பல விஷேசங்களுக்கும் தங்க நகை அல்லது நாணயத்தை பரிசாக வழங்குவதை இன்றும் நாம் பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம். இந்தியாவில் தங்கத்தின் விலையும் சர்வதேச நகரமான லண்டனோடு ஒப்பீடு செய்து பார்த்தால் இந்தியாவில் தான் தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்திருக்கிறது. factly என்ற தளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2018- 19ஆம் ஆண்டில் லண்டனில் சராசரியாக 10 கிராம் தங்கத்தின் விலை 28,380 ரூபாயாக இருந்தது அது தற்போது 70 , 315 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. அதுவே இந்தியாவில் சராசரியாக 31,193 ரூபாய் என இருந்த 10 கிராம் தங்கம் தற்போது 75 ,842 ரூபாய் என அதிகரித்து இருக்கிறது. அதாவது சர்வதேச நகரங்களுடன் ஒப்பிடும்போது இந்திய நகரங்களில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து இருப்பதையே இது காட்டுகிறது .
வெள்ளி விலை: தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் உயர்வு கண்டு வருவதை நாம் கவனிக்க தவறக் கூடாது. ஏழை மக்களின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளியும் படிப்படியாக விலை உயர்வு கண்டு வருகிறது. 2018 – 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு கிலோ வெள்ளியின் விலை சராசரியாக 38,404 ரூபாய் என இருந்து அதுவே 2024 – 25 ஆம் ஆண்டில் சராசரியாக 89, 131 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் நாம் அமெரிக்காவின் நியூவார்க்கு நகரத்தில் வெள்ளியின் விலையை பார்த்தோம் என்றால் 2018 -19 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 34, 540 ரூபாயாக இருந்து தற்போது 82,885 ரூபாயாக இருக்கிறது .
வெள்ளியும் ஏன் உயர்கிறது: இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது சராசரி விலை தானே தவிர இன்றைய நாளின் விலை இல்லை. தங்கத்துக்கு நிகராக வெள்ளிக்கு கலாச்சார ரீதியிலான ஒரு ஸ்டேட்டஸ் இல்லை என்றாலும் கூட தொழிற்சாலைகளில் அதன் பயன்பாடு அதிகரித்து இருப்பது அதன் தேவையும் விலையும் அதிகரிக்க செய்திருக்கிறது . தங்கம்-வெள்ளி விலை விகிதம்: தற்போது நாம் தங்கம் மற்றும் வெள்ளி விலை விகிதத்தை தெரிந்து கொண்டால் ஏன் தங்கமே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது என்பது நமக்கு புரியும். தற்போது 2024-25ஆம் நிதியாண்டில் சராசரியாக ஒரு கிலோ தங்கத்தின் விலை 75, 84,187 ரூபாய், இதுவே வெள்ளியின் விலை 89,130 . அப்படி பார்த்தால் ஒரு கிலோ தங்கம் வாங்க கூடிய விலைக்கு நாம் 85 கிலோ வெள்ளியை வாங்கலாம்.
தங்கம்-வெள்ளி விலை விகிதம்: தற்போது நாம் தங்கம் மற்றும் வெள்ளி விலை விகிதத்தை தெரிந்து கொண்டால் ஏன் தங்கமே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது என்பது நமக்கு புரியும். தற்போது 2024-25ஆம் நிதியாண்டில் சராசரியாக ஒரு கிலோ தங்கத்தின் விலை 75, 84,187 ரூபாய், இதுவே வெள்ளியின் விலை 89,130 . அப்படி பார்த்தால் ஒரு கிலோ தங்கம் வாங்க கூடிய விலைக்கு நாம் 85 கிலோ வெள்ளியை வாங்கலாம்.
மேலும் விலை உயருமா: சர்வதேச காரணிகள் 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தி இருக்கின்றன. இன்னும் சில மாதங்களுக்கும் தங்கம் விலை தொடர்ந்து உயர்விலே தான் இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு, உள்நாட்டில் பண்டிகை காலம் தொடக்கம் ஆகியவை தங்கம் விலையை உயர்த்தும் என சொல்லப்படுகிறது.