முதல் பாதி திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கையில், ஒரு கதாபாத்திரம் மிக அழகாக வந்துவிட்டது. கிட்டத்தட்ட படத்தில் அது இரண்டாவது ஹீரோ போன்றது. இதனை நான் சிம்பு சாரிடம் சொன்னதும், அவர் ஆர்வமாகி சந்தானம் சாரிடம் சொல்லி ஓகே செய்துவிட்டார்.
`ஓ மை கடவுளே’, `டிராகன்’ போன்ற படங்கள் மூலம் கவனம் குவித்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து சிம்பு நடிப்பில் படம் இயக்க உள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அடுத்து சிம்புவை வைத்து இயக்கும் படம் பற்றியும், அதில் சந்தானம் இணைந்தது பற்றியும், சிம்புவுடன் பணியாற்றும் அனுபவம் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

Simbu, Santhanam
இதுபற்றி கூறுகையில், “சிம்பு சார் என்றாலே தாமதமாக வருவார் என்ற குற்றசாட்டுகள் இருக்கிறதல்லவா? அவரை நான் ஒரு ஐந்து முறை சந்தித்திருக்கிறேன். போனில் நிறைய நேரம் பேசி இருக்கிறோம். நேரில் சந்திக்க திட்டமிடும்போது, 3.30க்குச் சொல்லி இருந்தால், இரு நிமிடம்கூட தாமதிக்காமல் போன் செய்வார். எனக்கு முன்பே அவர் அங்கு வந்துவிடுவார். ’நீங்க எனக்கு கால் செய்து ஏன் லேட்டு எனக் கேட்பதாக சொன்னால் யாராவது நம்புவார்களா?’ என அவரிடமே நான் கூறி இருக்கிறேன். எனவே நான் கேள்விப்பட்ட விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நான் நேரில் பார்க்கும் சிம்புவைத்தான் நான் நம்புகிறேன்.
சிம்பு சார்தான், ’இந்தக் கதையில் சந்தானத்தைப் பயன்படுத்த முடியுமா’ என்று கேட்டார். அப்போது இந்தப் படத்தின் திரைக்கதை முடிக்காத சமயம். வெறுமனே ஒருவரைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்க மாட்டேன். இப்போது அவர் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். கதைக்கு அவர் செட் ஆக வேண்டும். ’நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் சார், சொல்கிறேன்’ என்றேன். அதற்குள் அவர்கள் இருவரும் ராம்குமார் படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.

Ashwath Marimuthu Simbu
இப்போது ஒரு மாதத்திற்கு முன்பு படத்தின் முதல் பாதி திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கையில், ஒரு கதாபாத்திரம் மிக அழகாக வந்துவிட்டது. கிட்டத்தட்ட படத்தில் அது இரண்டாவது ஹீரோ போன்றது. இதனை நான் சிம்பு சாரிடம் சொன்னதும், அவர் ஆர்வமாகி சந்தானம் சாரிடம் சொல்லி ஓகே செய்துவிட்டார். ரசிகர்களுக்கு எஸ்.டி.ஆர். சந்தானம் காம்போ கொண்டாட்டமாக இருக்கும். மே மாதம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. அக்டோபருக்குள் படத்தை முடிக்க இருக்கிறோம். அடுத்தாண்டு முதல் பாதிக்குள் இந்தப் படம் வெளியாகிவிடும்” என்றார் அஷ்வத் மாரிமுத்து.
