சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இன்று இரவு தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி பிரதமரின் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Summary
பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு, இந்த வருகை சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது. மத ரீதியான சிக்கல்கள் நீடித்து வருவதால், பிரதமரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற இடங்களுக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி மற்றும் மதுரையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் இருந்து தனிவிமானத்தில் இன்று இரவு 9 மணிக்கு சென்னை வரும் பிரதமர், ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை காலை புதுச்சேரி செல்லும் அவர், அங்கு காலை 11.45 மணியளவில் நடைபெறும் விழாவில் இரண்டாயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி தமிழகம் வருகை
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் மதுரை வரும் பிரதமர், நான்காயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றுகிறார். மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.
பிரதமரின் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய மனு..
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மதுரையில் நாளை விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பு வலையங்குளம் முதல் விரகனூர் ரவுண்டானா வரை மற்றும் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் மதுரை விமான நிலையம் – அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனரக சரக்கு வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் மலை
இந்நிலையில் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டிருக்கும் நிலையில், அத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் தீபம் விவகாரத்தில் மத ரீதியான சிக்கல்கள் நீடித்து வருவதால், பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு மாற்றாக, மீனாட்சி அம்மன் கோயில், அழகர் மலை, பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களுக்கு பிரதமர் செல்ல மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கலாம் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
