
பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கண்ணியம், மனிதநேயம் மற்றும் தலைமைப் பண்புகள் தனித்துவமானவை. அரசியல் எதிரிகளைக்கூட மதித்து நடந்த அண்ணா, நவீன தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரிய உதாரணம். அண்ணாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவோம்…
Summary
பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கண்ணியம், மனிதநேயம் மற்றும் தலைமைப் பண்புகள் தனித்துவமானவை. அரசியல் எதிரிகளைக்கூட மதித்து நடந்த அண்ணா, நவீன தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரிய உதாரணம். அண்ணாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவோம்…
அரசியல் வரலாற்றில் இப்படியும் ஒரு அரவணைப்பாளரைப் பார்க்க முடியுமா? இப்படியும் ஒரு கண்ணியரை கற்பனை செய்யமுடியுமா? நான் கண்டதும் கொண்டதும் ஒரேதலைவர் என்று பெரியாரை அண்ணா குறிப்பிட்டாலும், அவருடனான முரண்பாடுகளால் தான் தனிகட்சிகண்டார் அண்ணா. ஆனால், பிற்காலத்தில் அண்ணாவை பெரியாரை எவ்வளவோ ஏசினாலும், அண்ணா ஒருநாளும் பெரியாரை தாக்கியதில்லை.

பேரறிஞர் அண்ணா
அண்ணா காலத்தில் தமிழ்நாட்டின் பெரிய தலைவர் காமராஜர். அவரை எதிர்த்துதான் அரசியல்செய்தார் அண்ணா. ஆனாலும், “குணாளா, குலக்கொழுந்தே!” என்று காமராஜரை கொண்டாடினார் அண்ணா. தேர்தலில் காமராஜர் அவருடைய சொந்த தொகுதியில் தோற்றபோது, துடித்துப்போனவர் அண்ணா. “காமராஜர் தோற்கலாமா? காமராஜர் இடத்துக்கு இன்னொரு தமிழர்வர 100 ஆண்டுகள் ஆகுமே” என்று வருந்தியவர் அண்ணா.
1937இல் பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கொண்டுவந்தபோது ராஜாஜி அரசுக்கு எதிராக இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தவர் அண்ணா; அதே ராஜாஜி தன்னுடைய நிலைப்பாட்டை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டபோது 1964இல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்கு ராஜாஜியை தலைமை வகிக்கச் சொன்னவர்அண்ணா.
தன்னையே எதிர்த்துப் போராடினாலும், சம்பத்தின் உண்ணாவிரத போராட்டத்தை எண்ணி, “தம்பிபசி பொறுக்கமாட்டானே!” என்று வருந்தியவர், பழரசத்தோடு போராட்டக்களம் நோக்கிச் சென்றவர் அண்ணா.
தமிழ்நாட்டின் முதல்வராக 1967இல் பதவியேற்றார் அண்ணா. அதுதொடங்கி அரைநூற்றாண்டுக்கும் மேலாக அவரை அடியொற்றி வந்தவர்களே தமிழகத்தை ஆள்கின்றனர். நவீன தமிழகத்தின் பேராட்சியாளர்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா மூவருமே அண்ணாவை தம் வழிகாட்டியாகப் பார்த்தனர்; அவருக்கு முன்னோடியாக பிறந்து, அரசியல் நிமித்தமாக அவரால் எதிர்க்கப்பட்டாலும் ராஜாஜி, காமராஜர், பக்தவசலம் எல்லோராலும் மதிக்கப்பட்டவர் அண்ணா; எல்லோரையும் நேசித்தவர் அண்ணா. யார் புழுதி வாரி தூற்றினாலும், “வாழ்க வசவாளர்கள்!” என்று புன்னகைத்தபடி கடந்தவர் அண்ணா!
அதனால்தான் அரசியலில் என்றும் கண்ணியத்துக்கான உதாரணராகப் போற்றப்படுகிறார் அண்ணா!