இந்த படத்தில் இசக்கி கார்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
பிரபல எழுத்தாளர் சுகா இயக்குநராக களம் இறங்குகிறார். வேணுவனம், வடக்குரத வீதி போன்ற புத்தகங்கள், `மூங்கில் மூச்சு’ பத்திரிகை தொடர் போன்றவற்றை எழுதியவர் சுகா. சினிமாவில் கமல்ஹாசன் நடித்த `பாபநாசம்’, `தூங்காவனம்’, தனுஷ் நடித்த `அசுரன்’ போன்ற படங்களின் வசனங்களை எழுதினார்.
தற்போது இவர் `சைலப்பன் சைக்கிள் மார்ட்’ படத்தை இயக்கியுள்ளார். ஒரு தென் தமிழகத்து கிராமம், அங்கு வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களது வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்து, ஒரு குடும்பச் சித்திரமாக இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுகா. இந்த படத்தில் இசக்கி கார்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார், யஷ்வந்த், சந்தான லட்சுமி மற்றும் மீனாட்சி ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

Sailappan Cycle Mart
ஏற்கெனவே ஆர்யாவின் தயாரிப்பில் `படித்துறை’ என்ற படத்தை துவங்கினார் சுகா. ஆனால் அப்படம் சில காரணங்களால் நின்றுவிட, இப்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் `சைலப்பன் சைக்கிள் மார்ட்’ படம் மூலம் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்துள்ளார் சுகா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
