உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்த லம்போகினி கார் விபத்தில், பிரபல புகையிலை வியாபாரி ஏ.கே மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில் கடந்த 8ஆம் தேதி அதிவேகமாக வந்த லம்போகினி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் புகுந்து விபத்து ஏற்படுத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய வாலிபர் காரில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்தபோது அந்த இளைஞர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, விபத்து ஏற்படுத்திய நபரையும் கைது செய்தனர். மேலும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான அவருடைய காரும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையில், விபத்து ஏற்படுத்திய நபர் உத்தரப்பிரதேசத்தில் பிரபல புகையிலை வியாபாரி ஏ.கே மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா என்பது தெரியவந்தது.

சிவம் மிஸ்ரா
அதேநேரத்தில் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விபத்து ஏற்படுத்திய சிவம் மிஸ்ராவின் பெயர் இடம்பெறாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சிவம் மிஸ்ராவை தப்பவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், சிவம் மிஸ்ரா இன்று கான்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டதா, ஏதேனும் குற்றவியல் அலட்சியம் உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக, இந்த விபத்தில் மோகன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
