”உண்மையில், ஐசிசிதான் ஒருபடி பின்வாங்கியுள்ளது” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு யூடர்ன் அடித்தது. இதையடுத்து இரு அணிகளும் திட்டமிட்டப்படி விளையாடுவது உறுதியாகி உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு யூடர்ன் அடித்தது. இதையடுத்து இரு அணிகளும் திட்டமிட்டப்படி விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொஹ்சின் நக்வி
அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, “நாங்கள் வங்கதேசத்தைத் தவிர்த்து வேறு எதையும் விவாதிக்கவில்லை. எங்களுடைய ஒரே குறிக்கோள் வங்கதேசம் மரியாதை பெற வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது சுட்டிக்காட்டினோம். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நலனை கருதவில்லை. எங்களுடைய பணி முற்றிலும் வங்காளதேசத்துடன் தொடர்புடையது. அதனடிப்படையில் அரசு முடிவு எடுத்துள்ளது. பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அறிவுறுத்தியுள்ளது. ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும், இந்த உலகளாவிய தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளை ஆதரிப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் நஜாம் சேத்தியோ, ”உண்மையில், ஐசிசிதான் ஒருபடி பின்வாங்கியுள்ளது. இந்திய போட்டியைப் புறக்கணிப்பதற்கு எந்தத் தடைகளும் இருக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் அனைத்துக் கோணங்களிலும் அலசிப் பார்த்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
