காணாமல் போன சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்
காணாமல் போன சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்
Ramkumar Rajendran · coimbatore
வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு
03
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் காணாமல் போன 15 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் சுமார் 15 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த 15 வயது சிறுவன், அங்கு தங்க விருப்பமின்றி வெளியே சென்றுள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரும் தீவிரமாகத் தேடப்பட்டனர். சுமார் 15 மணி நேரத்தில் இருவரையும் கண்டுபிடித்த போலீசார், பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விரைந்து செயல்பட்டு சிறுவனையும் சிறுமியையும் மீட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி பாராட்டியுள்ளார்.
