
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களிடம் தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய், கடந்த 27ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு விஜய் கரூர் செல்லாததும் கடும் விமர்சனத்தை எழுப்பியது.
இதற்கிடையே, கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பேசி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து கருத்துக்களை விஜய் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, “பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும், நான் உங்களுடன் இருக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் இருந்து மீண்டு வரமுடியாத துயரத்தில் இருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும்” என்று மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அறிவுரை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல், விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க வேண்டாம் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்
இந்நிலையில், கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகை இன்று அல்லது நாளைக்குள் வழங்க விஜய் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக வங்கிகள் விடுமுறையில் இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப விவரங்கள் சேகரிக்கப்பட்டு காசோலையாக வழங்குவதா அல்லது நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதா என்ற பணியில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர்.