மெக்கா அருகே ட்ரோன் சுட்டு வீழ்த்தியதாக சவுதி குற்றச்சாட்டிய நிலையில், அது ‘அருவருப்பான பொய்’ என ஹவுதி கூறியுள்ளது.
ஹவுதி ட்ரோன் தாக்குதல் மெக்கா அருகே தடுக்கப்பட்டதாக சவுதி கூற, ஹவுதிகள் புனிதத் தலங்களை குறிவைக்கவில்லை என மறுக்கின்றனர். தாங்கள் சவுதியின் எண்ணெய் நிலையங்கள், ராணுவத் தளங்களையே குறிவைப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.
ஏமனில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற ஏமன் அரசுப் படைகளின் நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் ஏமனில் சவுதி ஆதரவு படைகள் முக்கியமான பகுதிகளை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செங்கடலில் உள்ள முக்கிய துறைமுகம் மற்றும் முக்கிய கடல்வழிக்கு அருகிலுள்ள தீவு ஒன்றை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் கைப்பற்றியிருப்பது பிராந்திய பாதுகாப்பு மற்றும் எண்ணெய் வர்த்தகம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

Bab al mandeb Map
ஹார்முஸ் நீரிணையைச் சுற்றி அமெரிக்கா–ஈரான் மோதல் நீடிக்கும் நிலையில், செங்கடலிலும் ஹவுதி நடவடிக்கைகள் தீவிரமடைவது வளைகுடா நாடுகளுக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கமாக, கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலருக்கு மேல் உயர்ந்தது.
மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் மற்றும் கடல்வழிப் பாதைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், உலகளவில் எரிபொருள் விலை மற்றும் பொருளாதாரத்தில் மேலும் தாக்கம் ஏற்படலாம் என்ற கவலையும் நிலவி வருகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மெக்காவின் புறநகர்ப் பகுதியில் பறந்து வந்த ட்ரோனை சவுதி வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.

Houthi attacks saudi oil facility
சுமார் ஒரு தசாப்தத்துக்குப் பிறகு மெக்காவை நோக்கி நடத்தப்பட்டதாக கூறப்படும் முதல் தாக்குதல் முயற்சி இது எனவும் சவுதி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு மெக்காவை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இடைமறிக்கப்பட்டது என்றும் சவுதி கூறியுள்ளது.
ஆனால், மெக்காவை தாங்கள் குறிவைக்கவில்லை என ஹவுதிகள் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளனர். ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, கட்டுக் கதைகளும் பொய்களும் சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது என்றும் புனிதத் தலங்களுக்கு ஏமனில் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் நடவடிக்கைகள் அவர்களின் எண்ணெய் நிலையங்கள் மற்றும் ராணுவத் தளங்களை மட்டுமே குறிவைக்கின்றன அவை புனிதத் தலங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Houthis
மேலும் ஹவுதி அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்த ஹிஷாம் அல்-அசாத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிடுகையில், சவூதி அரேபியாவின் இந்தக் குற்றச்சாட்டை “அருவருப்பான பொய்” என்று சாடியுள்ளார். இது மாதிரியான பொய் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்று இனி இது யாரையும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
