நேபாளப் பெருவெள்ளத்தில் இருந்து 1,600-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியரின் செயல் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
Summary
இமயமலையில் பனிப்பாறை உடைந்ததால் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் நூற்றுக்கணக்கான கிராமங்களை புரட்டிப் போட்டது. நுவாகோட் பகுதியில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கும் முன், தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவடி நண்பரின் எச்சரிக்கையை நொடியில் நம்பி, மணி அடித்து மாணவர்களை உயரமான இடத்துக்கு அழைத்துச் சென்றார். இந்த துரித முடிவால் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் தப்பினர்.
அந்தப் பள்ளியில் வழக்கம்போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன… நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இன்னும் சில நிமிடங்களில் அந்தப் பள்ளியே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. அந்த நேரத்தில் தலைமை ஆசிரியர் எடுத்த அந்தத் திடீர் முடிவு… இன்று 1,600-க்கும் மேற்பட்ட பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது! அழகு நிறைந்த இடங்களில்தான் ஆபத்தும் நிறைந்திருக்கும் என்பார்கள். அப்படித்தான் தற்போது நேபாளத்தில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது பெருவெள்ளம்.

Nepal flood Reuters
கடந்த சில தினங்களுக்கு முன்பு இமயமலையின் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. மின்னல் வேகத்தில் பாய்ந்த பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,500-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நேபாளப் பெருவெள்ளத்தில் இருந்து 1,600-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியரின் செயல் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
நேபாளத்தின் நுவாகோட் பகுதியில் திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. நேபாளப் பெருவெள்ளத்தில் இந்தப் பள்ளியும் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. பெருவெள்ளம் ஏற்பட்ட அன்று அந்தப் பள்ளியும் செயல்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டதால் 1,600-க்கும் மேற்பட்ட பிஞ்சு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவடி, “ஆகஸ்ட் 26 அன்று காலை சுமார் 9.20 மணியளவில், ஆற்றின் மேல்பகுதியில் உள்ள பெட்ராவதி என்ற கிராமத்திலிருந்து எனது நண்பர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் பதற்றத்துடன் பேசினார். கிராமம் பெருவெள்ளத்தால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், உடனடியாகத் தப்பிக்கும்படியும் கூறினார்.

Nepal flood Reuters
அது உண்மையா என்று கூட ஆராயாமல் உடனடியாகப் பள்ளி மணியை அடித்து, அருகில் இருந்த உயரமான பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம். பள்ளிக்கு வேனில் வந்து கொண்டிருந்தவர்களையும் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பள்ளத்தாக்குப் பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரித்தோம். அதன் பிறகு சில வினாடிகளிலேயே பள்ளியே வெள்ளத்தில் மூழ்கியது” எனத் தெரிவித்தார். வெள்ள எச்சரிக்கை வந்த உடனேயே முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டதால் 1,600-க்கும் மேற்பட்ட பிஞ்சு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, பலரும் தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
