பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Summary
தமிழகத்தில் அதிகரிக்கும் விமான தேவைக்காக திட்டமிடப்பட்ட பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தை, விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தால் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ரத்து செய்ததாக அறிவித்தார். விவசாயிகளுக்கு முன்பே அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் மாற்று இடங்கள் தேடப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிகரித்துவரும் விமான தேவைக்கு மாற்றாக தமிழகத்திற்கு புதிய விமான நிலையம் தேவை என்பதால், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு முன்னெடுத்தது. பரந்தூர், நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து மொத்தம் 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு இதற்கான அரசாணை 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.1,822.45 கோடி ஒதுக்கி இருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தவெக தலைவராக இருந்த விஜய் நேரில் சென்று விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும் அவர் பங்கேற்றார். ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது தவெக ஆட்சி அமைந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடங்குமா அல்லது கைவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். அப்போது பேசிய விஜய், விமான நிலையம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், “தொழில் வளர்ச்சியில் விமான நிலையத்தின் பங்கு முக்கியம் என்பதை நன்கு அறிவேன். ஆனால், அதேபோல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே, குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் மாற்று இடங்கள் தேர்வு செய்யப்படும். நான் ஏற்கனவே விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின் பேரில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் இந்த அரசால் கைவிடப்படுகிறது” என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பேசி இருக்கும் திமுகவின் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டுக்கும் சென்னையின் தொழில் வளர்ச்சிக்கும் எதிர்கால ஆதாரமாக விளங்கிய பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விவாதிக்க, சட்டப்பேரவை விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்புத் தீர்மானம் கோரிக்கை விடுத்திருந்தோம். திங்கட்கிழமை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமாக விவாதிக்க எடுத்துக்கொள்வதாகக் கூறியிருந்தனர். ஆனால், இன்று 110-ன் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார். அந்த விதியின் கீழ் விவாதிக்க வேறு எதுவும் இல்லை என்று கூறி, எதிர்க்கட்சிகளின் குரல்வளை இன்று நசுக்கப்பட்டிருக்கிறது.. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
