திமுகவின் செயற்குழு நடைபெற்று வரும் நிலையில், ஒரு பொறுப்பிற்கு ஒருவர் எத்தனை முறை போட்டியிடலாம், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை உயர்வு உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 வென்று ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். அதேபோல, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பல கட்சிகளும் தேர்தல் தோல்விக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகி தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்திருக்கின்றன.
திருமாவளவன் – விஜய்
இந்தசூழலில் தான், திமுக தோல்விக்கு ஜென் சி இளைஞர்களை ஈர்க்கத் தவறியதும், அக்கட்சியின் பதவிகளில் இளைஞர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதுமே காரணமாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி, திமுக மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு 70 ஆக நிர்ணயம். 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ”நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பாரக்காத தோல்வியும் இல்லை; தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதையும் நாம் மறைக்கத் தேவையில்லை; நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டாலின்
ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம். உங்களின் ஒப்புதலுடன் கழகத்தின் அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும், கழகம் வலிமையோட இருப்பதற்கான காரணம், நம் அமைப்புமுறை தான். மூத்தவர்கள் இளைஞர்களை வரவேற்க வேண்டும் என்றும் தனக்கு இணையாக யாரும் வளர கூடாது என நினைக்க கூடாது என்றும் பேசி இருக்கிறார். மேலும், Comeback கொடுப்பதில் Specialist! சிறப்பாகக் கொடுப்போம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
