போபாலில் இளைஞர்களின் பிறப்புறுப்பு விதைப்பைக்கு பணம் கிடைக்கும் என பரவிய இன்ஸ்டா வதந்தியை பார்த்து 17 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Summary
மத்திய பிரதேசம் போபாலில், இன்ஸ்டாகிராம் வதந்தியை நம்பிய கல்லூரி மாணவர் ஜோஹெப் கான் மற்றும் நண்பர்கள், 17 வயது ஏழை சிறுவன் ரெஹானை ரூ.100 ஆசை காட்டி கடத்திச் சென்று தோபி காட் பகுதியில் கத்தியால் குத்திக் கொன்று, பிளேடு மூலம் விதைப்பைகளை அகற்றிய கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் ஏரியில் வீசப்பட்ட நிலையில், காவல்துறை பலரை கைது செய்து விசாரிக்கிறது.

இன்ஸ்டாகிராம் வதந்தியை நம்பி 17 வயது சிறுவனின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலை அதிரவைத்துள்ளது.
இளைஞர்களின் பிறப்புறுப்பு விரைகளுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு விலைபோகும் என இன்ஸ்டாவில் பரவிய வதந்தியை, கல்லூரி மாணவர் ஜோஹெப் கான் என்பவர் தனது நண்பர்களுக்கு காட்டியுள்ளார். அவரது நண்பர்கள் குழு, ஏழைச் சிறுவன் ரெஹானை ஏமாற்றி அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்து, உடல் உறுப்பை எடுத்து சென்று விற்க முயன்றுள்ளனர்.
என்ன நடந்தது?
வளைகுடா நாடுகளில் இளைஞர்களின் பிறப்புறுப்பு விரைகள் கோடிக்கணக்கில் விலை போகும் என்று கூறிய இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை பார்த்த கல்லூரி மாணவர் ஜோஹெப் கான் என்பவர், அந்த வீடியோவை தன் சக நண்பர்களுக்கு காட்டியுள்ளார். அவர்கள் பார்த்த இன்ஸ்டாகிராம் வீடியோவின் படி இளைஞர்களின் பிறப்புறுப்பு விரைகளுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற மலைக்க வைக்கும் தொகை அவர்களை ஒரு கொடூர செயலுக்கு வழிநடத்தியுள்ளது.
இந்தக்கட்டுக்கதையை நம்பிய அவர்கள், தெருக்களில் சிறுசிறு வேலை பார்க்கும் ஏழ்மை சிறுவர்களை டார்கெட் செய்து பணத்தாசை காட்டி தனியாக அழைத்துசெல்ல முயன்றுள்ளனர். முதலில் ஒரு சிறுவன் வரமறுத்த நிலையில், இரண்டாவதாக ஒரு சிறுவனை கட்டாயமாக கடத்த முயன்றுள்ளனர். அப்போது அந்த சிறுவன் இவர்களிடம் சண்டையிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

கொலை
இரண்டு முயற்சிகளுக்கு பிறகு 3வது முயற்சியில் தெருக்களில் பேனாக்கள் மற்றும் கீ-செயின்களை விற்றுத்திரியும் 17 வயது ரெஹானிடம் ரூ.100 தருவாக ஆசைக்காட்டி நம்பவைத்து கடத்திச்சென்றுள்ளனர். அச்சிறுவனை தோபி காட் பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்தக் கும்பல், அங்கு அவனை கத்தியால் குத்திக் கொன்று. பிளேடு மூலம் அவனது விதைப்பைகளை அகற்றியதாக கூறப்படுகிறது. இந்த கொடூர செயலுக்கான சூத்திரதாரி 20 வயதான கல்லூரி மாணவர் ஜோஹெப் கான் என்று கூறப்படுகிறது.
இந்த குற்றம் நடைபெறும்போது அவர் அந்த கும்பலுடன் இல்லை என்றும், ஆனால் என்ன செய்யவேண்டும் என்று வீடியோ காலில் அவர்களுக்கு வழிகாட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வதந்தியை நம்பி ஏமாற்றம்..
அகற்றப்பட்ட விரைகளை வாங்குபவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட அந்த கும்பல், அகற்றப்பட்ட உடல் பாகங்களை சுமார் இரண்டு நாட்களாக ஒரு மாடியில் ஐஸ்கட்டிகளில் வைத்துப் பாதுகாத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்தரங்க உறுப்புகளை வாங்க யாரும் கிடைக்காததால், அவர்களின் வணிகத் திட்டம் விரைவில் தோல்வியடைந்தது. வாங்குபவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சூழலில், அந்தத் திசுவை எவ்வாறு பாதுகாப்பது அல்லது விற்பது என்பது அவர்களுக்குத் தெரியாததால் அருகிலுள்ள ஏரியில் தூக்கிவீசிவிடுங்கள் என ஜோஹேப் கான் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம், கொலை செய்யப்பட்ட சிறுவனை காணவில்லை என அவனின் அம்மா கொடுத்த புகாரின் பேரில் வெளிவந்தது. ஆகஸ்ட் 10 அன்று தோபி காட் அருகே உள்ள ஏரியில் இருந்து உயிரிழந்த சிறுவனின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், உயிரிழப்பை ஏற்படுத்திய காயங்கள் இருந்ததும், அவரது விதைப்பைகள் அகற்றப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை 20 வயதான ஜோஹேப் கான் மற்றும் 18 வயதான ஆமிர் குரேஷி இருவரை கைது செய்திருக்கும் காவல்துறை, மூன்று சிறார்களையும் பிடித்து வைத்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் உடல் மட்டுமே கிடைத்த நிலையில், அறுக்கப்பட்ட விதைப்பைகளை ஏரியில் தேடும்பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பார்க்கப்பட்ட ஒரு வதந்தி வீடியோவை நம்பி கொடூர செயலில் ஈடுபட்ட இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
