சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக கூறி போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
மாநகர போக்குவரத்து கழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றும் நிலையில், புதிய நடத்துனர் நியமனத்திற்கு உத்தரப் பிரதேச நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாநகர், குன்றத்தூர், குரோம்பேட்டை பணிமனைகளில் CITU தொழிற்சங்கம் வடமாநிலத்தவரை நடத்துனர்களாக நியமிக்க முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டி போராட்டம் நடத்தியது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் பேருந்து சேவையை MTC என அழைக்கப்படும் மாநகர போக்குவரத்து கழகமே மேற்கொள்கிறது. இந்த போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பிரிவு என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது நடத்துனர் பணிக்கு கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி போக்குவரத்து துறை மூலமாக நடத்துனர்கள் பணியில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. தண்டையார்பேட்டை, அயனாவரம், அடையாறு, குரோம்பேட்டை, அண்ணா நகர் போன்ற போக்குவரத்து பணிமனையில் நடத்துனர்கள் நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் வட மாநில தொழிலாளர்களை நடத்துனர்களாக பணியமர்த்த முயற்சிப்பதாக கூறி அண்ணாநகர், குன்றத்தூர், குரோம்பேட்டை பணிமனையில் CITU போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து துறை வேலைகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், வடமாநிலத்தவர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே MTC-யில் 1797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளததாக கூறி, அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் புதிய நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதன்படி புதிய நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் பேருந்து நிறுத்தங்களில் பயணிக்கக் காத்திருக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்களை தவெக அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
