முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்வது அல்லது வேறொருவருடன் குடும்பம் நடத்துவது தொடர்பான விவகாரங்கள் சமீபகாலமாக கவனம் பெற்று வருகின்றன.
Summary
அசாம் அரசு, முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வ விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கடும் நடவடிக்கை அறிவித்துள்ளது. முதல் மனைவி அரசிடம் புகார் அளித்தால், அந்த ஊழியரின் சம்பளத்தில் 20% வரை பிடித்தம் செய்து, நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சட்டநடவடிக்கை முடியும் வரை இந்த நிதியுதவி தொடரும்.
முதல் திருமணத்தில் கணவன் அல்லது மனைவி உயிரிழந்துவிட்டால், அதன் பிறகு மறுமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்றுதான். அதேபோல், மனக்கசப்பு அல்லது கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதும் நடைபெற்று வருகிறது. ஆனால், முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்வது அல்லது வேறொருவருடன் குடும்பம் நடத்துவது தொடர்பான விவகாரங்கள் சமீபகாலமாக கவனம் பெற்று வருகின்றன.

himanta biswa sarmaani
இந்நிலையில், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் மற்றொரு திருமணம் செய்யும் அரசு ஊழியரின் சம்பளத்தில் 20 சதவீதம் வரை பிடித்தம் செய்து, அந்தத் தொகையை முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
முதல் மனைவி அரசிடம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இந்த சம்பளப் பிடித்தம் மேற்கொள்ளப்படும் என்றும், விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை இந்த நிதியுதவி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு பணிவிதிகளை அல்லது தொடர்புடைய சட்டங்களை மீறும் ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

Marriage
விதிகளை மீறும் திருமணத்தைத் தடுக்கும் வகையில் அசாம் அரசு பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் என்ற இந்த அறிவிப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது. எனினும், இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் விதி அல்ல. அசாம் மாநில அரசு ஊழியர்களை மையமாகக் கொண்ட நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
