பிரதமர் மோடி முன்வைத்த ஒரு கருத்தைத் தொடர்ந்து, அவரை விமர்சிக்கும் வகையில் ‘திமாகி நக்சல் கட்சி’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
Summary
உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் வேலைஇல்லா இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அவமதித்ததிலிருந்து, கரப்பான் ஜனதா கட்சி, E20 ஜனதா கட்சி போன்ற சமூக ஊடக இயக்கங்கள் உருவாகி, நீட் முறைகேடு, எத்தனால் கலப்பு கொள்கை ஆகியவற்றை எதிர்த்து போராடி, மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை கட்டாயப்படுத்தின. இப்போது மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சை எதிர்த்து ‘திமாகி நக்சல் கட்சி’ கணக்கும் வேகமாக பிரபலமடைந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றில் வேலையில்லாத இளைஞர்களை பற்றி குறிப்பிடும்போது அவர்களை கரப்பான்பூச்சிகள் என்று குறிப்பிட்டார். அவரின் கருத்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அபிஜித் திப்கே என்பவர் சமூக வலைத்தளங்களில் கரப்பான் ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கணக்கை தொடங்கினார்.
இந்த கணக்கு பெரும் ஆதரவை பெற்ற நிலையில், சில நாட்களிலேயே இதனை கோடிக்கணக்கானோர் பின்தொடர்ந்தனர். தொடர்ந்து இதே பெயரில் அபிஜித் திப்கே ஒரு அமைப்பையும் உருவாக்கி, நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலக வேண்டும் என தலைநகர் டெல்லியில் போராட்டத்தை நடத்தினார்.

abhijeet dipke Reuters
இந்த போராட்டத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்த நிலையில், கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது. மேலும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து 1 லிட்டர் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து E20 ஜனதா கட்சி என்ற அமைப்பும் சமூக வலைத்தளத்தில் உருவாகி லட்சக்கணக்கானோரின் ஆதரவை பெற்றது.
இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியின் பேச்சை கண்டித்து திமாகி நக்சல் கட்சி (“Dimagi Naxal Party” ) என்ற புதிய இன்ஸ்டாகிராம் கணக்கு சமூக ஊடகங்களில் தொடங்கப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கணக்கு தொடங்கப்பட்ட உடனயே லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Dimagi Naxal party
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ஆயுதமேந்திய நக்சலிசம் காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், திமாகி நக்சல்கள், அதாவது அறிவுசார் நக்சல்கள் தற்போது அரசு நிர்வாகத்தின் முக்கிய இடங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மோடியின் இந்த கருத்தைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் திமாகி நக்சல் கட்சி என கணக்கு உருவாக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. எனினும் இந்த கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது. அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்படும் முன்னர் பல சைபர் தாக்குதல்களுக்குத் தான் இலக்கானதாக அந்தக் கணக்கு தனது ‘ஸ்டோரி’களில் (stories) பதிவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
