ஒரு நீதிபதி நான்கு மாதங்களில் அடுத்தடுத்து 22 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
ஒரு குற்றவாளிக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையே மரண தண்டனைதான். ஆனால், ஒரு கைதிக்கு மரண தண்டனை வழங்குவது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்குப் பல்வேறு சட்ட விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில், ஒரு நீதிபதி நான்கு மாதங்களில் அடுத்தடுத்து 22 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக ரவி குமார் திவாகர் பணியாற்றி வருகிறார்.

representation image
இவர் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், வெவ்வேறு வழக்குகளில் மொத்தம் 22 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தீர்ப்புகள் சுமார் 10 தனித்தனி வழக்குகளில் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏப்ரல் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது மூன்று மகன்கள் என நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல், ஒரு வழக்கறிஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மேலும், பணியில் இருந்த ஹோம் கார்டு வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்குகளில் சிலவற்றை நீதிமன்றம் ‘rarest of rare’, அதாவது ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்று குறிப்பிட்டு, மரண தண்டனை விதித்துள்ளது. இதனால், “ஒரு நீதிபதி இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை மரண தண்டனைகளை எப்படி வழங்க முடியும்?” என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தியாவில் மரண தண்டனை என்பது சாதாரணமாக வழங்கப்படும் தண்டனை அல்ல.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மிகவும் விதிவிலக்கான ‘rarest of rare’ வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. மேலும், நீதிபதி ரவி குமார் திவாகர் வழங்கியுள்ள இந்த மரண தண்டனைத் தீர்ப்புகள் உடனடியாக நிறைவேற்றப்படாது. கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்த பிறகு, அது உயர் நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது. அதன்பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் நடைபெறும். இந்தத் தொடர் மரண தண்டனைத் தீர்ப்புகள் தற்போது சட்ட வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.
