ஏர் இந்தியா AI2379 விமானம் 300 அடி வானில் சரிந்த சம்பவம் குறித்த ஆய்வில், விமானத்தின் மூன்று தனித்தனி ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் தற்காலிகமாக குறைந்ததால், முக்கிய விமானக் கட்டுப்பாட்டு பகுதிகள் சில விநாடிகள் செயல்படாமல் போனது தெரியவந்துள்ளது.
‘அந்த விமானி கஞ்சா அடித்து விமானம் ஓட்டினார்’ , ‘விமானம் சரசரவென 300 அடி சரிந்தது’, ‘எல்லா ரகசியமும் உடைக்கப்பட்டுவிட்டது’ என்று ஒரு விமான அசம்பாவிதம் ஒரு சில நாட்களாக தலைப்பு செய்தியாக மாறியது. இப்போது, ‘விமானியெல்லாம் இருக்கட்டும்… விமானத்தில் வேறு ஒரு பயங்கரமான பிரச்சனை இருந்தது’ என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற ஏர் இந்தியா AI2379 விமானம் 300 அடி வானில் சரிந்த சம்பவம் குறித்து ஏர்பஸ் மேற்கொண்ட ஆரம்பகட்ட ஆய்வில், விமானத்தின் மூன்று தனித்தனி ஹைட்ராலிக் அமைப்புகளிலும் ஒரே நேரத்தில் அழுத்தம் தற்காலிகமாக குறைந்ததால், முக்கிய விமானக் கட்டுப்பாட்டு பகுதிகள் சில விநாடிகள் செயல்படாமல் போனது தெரியவந்துள்ளது.

Pilot Reuters
VT-EXO பதிவெண் கொண்ட ஏர்பஸ் A320neo விமானம், தாய்லாந்தின் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி பயணித்தபோது, நடுவானில் திடீரென சுமார் 300 அடி உயரத்தை இழந்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது 24 பயணிகள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தனர். சிலருக்கு முதுகுத்தண்டு காயங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் ஒரே நேரத்தில் அழுத்தத்தை இழந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது உண்மையான இயந்திரக் கோளாறா அல்லது சென்சார், வயரிங், மின்சாரப் பிரச்சினைகளால் தவறான எச்சரிக்கைகள் உருவானதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. இருப்பினும் சம்பவத்திற்கான இறுதி காரணம் உறுதி செய்யப்படவில்லை.

Air India Reuters
இதனிடையே, விமானக் குழுவினரின் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை முடிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. கேப்டனின் உறுதிப்படுத்தும் ஆய்வகப் பரிசோதனையில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேப்டனும் துணை விமானியும் விசாரணை முடியும் வரை விமானப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துக்குப் பிறகு ஏர் இந்தியா தனது சுமார் 5,000 விமானிகளுக்கும் அனுமதியற்ற போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறியும் கட்டாயப் பரிசோதனையை தொடங்கியுள்ளது. விமானப் பணியாளர்களுக்கான பரிசோதனை விதிமுறைகளை விமானப் போக்குவரத்து அமைச்சகமும் மறுபரிசீலனை செய்து வருகிறது. தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
