ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் ஏற்பட்டுள்ள ‘எபோலா’ வைரஸ் தொற்று வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் அதிவேகமாக பரவிவருவதால் 20 நாட்களில் பலி எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
Summary
காங்கோவில் எபோலோ வைரஸ் அதிவேகமாக பரவி, 4,381 பேருக்கு தொற்று உறுதி, 2,011 பேர் பலி. கிளர்ச்சி, மோசமான சாலைகள் காரணமாக கிராமங்களுக்கு சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் சென்று சேர முடியாமல் சுகாதாரத்துறை திணறுகிறது. சம்பளம் வழங்காததால் வேலைநிறுத்தம் செய்த ஊழியர்களும் நிலையை மோசமாக்க, நோய் பரவல் வரலாற்றிலேயே மிக வேகமாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த மே 15ஆம் தேதி அறிவிக்கப்பட்ட எபோலோ என்ற கொடிய வைரஸ் நோய், வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் அதிவேகமாக பரவிவருவதால் பலி எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் நிலவிவரும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையேயான மோதல், மோசமான சாலைகள் போன்றவற்றால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கிராமங்கள் வரை கொண்டுசெல்வதில் சுகாதாரத்துறை திணறிவருகிறது. அதுமட்டுமில்லாமல் பணிக்குவரும் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் வேலைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதும் நோய் பரவல் வேகத்திற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

எபோலா வைரஸ் reuters
அரசாங்கம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அப்டேட்டின் படி, 4,381 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், 2,011 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 704 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நோய்ப்பரவல் மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இது பல மாதங்களுக்கு முன்பே, அதாவது பிப்ரவரி மாதத்திலேயே, தொடங்கிவிட்டதாக மரபணு வரிசைப்படுத்தல் காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் அதிவேகமாக பரவும் நோய்..
இந்த நோய்ப் பரவலின் வேகம் முதல் 1,000 இறப்புகளுக்கு ஒன்பது வாரங்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அடுத்த 20 நாட்களில் பலி எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. நோய்பரவலை கண்காணித்து நிர்வகிப்பதற்கான முயற்சிகளை விட, நோய் பரவுவது மிகவேகமாக இருப்பதால் சுகாதாரத் துறையினருக்கு அதிக நெருக்கடியை கொடுத்துள்ளது. அதாவது ஆப்பிரிக்கா வரலாற்றில் 28,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 11,000-க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவுசெய்த 2014-2016ஆம் ஆண்டு தொற்றின் போது இருந்த 39.6 சதவீத இறப்பு விகிதத்தை விட, தற்போதைய இறப்பு விகிதம் 45.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.

எபோலா வைரஸ் reuters
எபோலா பல்வேறு வகையான வைரஸ்களால் ஏற்படலாம் என சொல்லப்படும் நிலையில், தற்போது உருவாகியிருக்கும் புண்டிபுக்யோ வைரஸ் கொடியதாக கருதப்படுகிறது. ஏற்கனவே 2014-2016 ஆம் ஆண்டு பரவலுக்குக் காரணமான வைரஸ் வகை மிகவும் கொடியதாகக் கருதப்பட்ட நிலையில், இந்த புண்டிபுக்யோ பரவலில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என அரசுத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏனெனில் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு பராமரிப்பும், உதவியும் போதுமான அளவு விரைவாகச் சென்றடையவில்லை என்றும், பல நோயாளிகள் அறிகுறிகளைத் தாமதமாகவோ அல்லது முற்றியபிறகோ தான் தெரிவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தடுப்பூசி, சிகிச்சை முறை இல்லை..
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ சிகிச்சைகளோ இல்லாத, அரிதான புண்டிபுக்யோ வைரஸால் இந்த நோய் பரவல் ஏற்படுவதால், இது முந்தைய பெரும்பாலான நோய் பரவல்களிலிருந்து வேறுபட்டது என்றும், இதற்கு விரைவில் சிகிச்சையை கண்டறியவேண்டும் என்றும் சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நோய் பரவலின் மையமாக விளங்கும் கிழக்கு காங்கோவின் இடுரி மாகாணத்தில் மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து நோய் பரவுதல் அதிகரித்து வருவதால் இறப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

எபோலா வைரஸ் reuters
முதல் எபோலா வைரஸ் 1976-ல், தற்போது காங்கோ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள எபோலா நதிக்கு அருகில் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
