
இந்தியா முழுவதும் மக்கள் நவராத்திரி பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடி வரும் வேளையில், இந்தப் பண்டிகையின் போது வட இந்தியாவில் ஜவ்வரிசி தான் முக்கிய உணவாகக் கருதுகின்றனர். ஆம் இந்தப் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் உபவாசம் இருப்பார்கள், இக்காலகட்டத்தில் ஜவ்வரிசி முக்கிய உணவாக இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் ஜவ்வரிசி நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சரி இதற்கும் சேலத்திற்கும் என்ன தொடர்பு..? இந்தியாவின் ஜவ்வரிசி தலைநகராக இருப்பது சேலம், நாட்டின் 80 சதவீத ஜவ்வரிசி சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது எத்தனை பேருக்கு தெரியும். ஜவ்வரிசி-ஐ Sabudana, சாகோ எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜவ்வரிசி முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் சாகோ என்னும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்டாலும் இந்தியாவில் ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1860-களில் இந்தியாவில் வறுமை அதிகமாக இருந்த காலகட்டத்தில் மக்களின் பசியைப் போக்கப் பல உணவுப் பொருட்கள் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.
அப்படி இந்தியாவில் பஞ்சத்தைப் போக்கும் ஒரு உணவாக அறிமுகமானது தான் மரவள்ளிக்கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஜவ்வரிசி தயாரிப்புத் துவங்கப்பட்டது.
1940-களில் சேலத்தில் முதல் ஜவ்வரிசி தொழிற்சாலை தொடங்கப்பட்டது, இது இந்தியாவில் இத்தொழிலின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது வரலாற்று நிகழ்வு. இதன் வளர்ச்சி தற்போது இந்தியாவின் ஜவ்வரிசி உற்பத்தியில் 80 சதவீத பங்கு வகிக்கிறது சேலம் மாவட்டம்.
ஆரம்பக்கட்டத்தில் சேலம் தொழிற்சாலைகளில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மரவள்ளிக்கிழங்கு மூலம் ஜவ்வரிசி தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2000-களின் தொடக்கத்தில், இந்தத் தொழிலை ஒரு பெரிய கிளஸ்டராக மாற்றுவதற்கு அரசு நிதி உதவி அளித்தது. இதன் விளைவாக, சேலத்தில் இத்தொழிலை நவீன இயந்திரங்களுடன் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. ஜவ்வரிசி தொழில் மூலம் சேலம் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயத்தைப் பெரிய அளவில் மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஜவ்வரிசி உற்பத்தி மரவள்ளிக்கிழங்கு அடிப்படையாகக் கொண்டது என்பதால் கேரளாவில் மட்டுமே அதிகமாக இருந்த மரவள்ளிக்கிழங்கு விவசாயம் தமிழ்நாட்டில் அதிகரித்து இந்தியாவின் மிகப்பெரிய மரவள்ளிக்கிழங்கு விளைவிக்கும் பகுதியாகச் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மாறியது.
மேலும் தமிழ்நாடு மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் கேரளாவை பின்னுக்குத் தள்ளியது. இந்த மாற்றம், தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, இத்தொழிலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.