அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான சவுக்கு சங்கரின் யூடியூப் வீடியோக்கள் குறித்து நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சினிமா விழா ஒன்றில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, சவுக்கு சங்கரின் வீடியோக்களைத்தான் தொடர்ந்து பார்ப்பதாகவும், அவரது பேச்சைக் கேட்காமல் தனது நாள் முழுமையடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சவுக்கு சங்கருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது தனக்கு உண்மையாகவே வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தனது தனிப்பட்ட பாணியில் கருத்துகளை முன்வைத்து வரும் சவுக்கு சங்கர், பல்வேறு சர்ச்சைகளிலும் சட்ட நடவடிக்கைகளிலும் சிக்கியுள்ளார். அரசு நிர்வாகம், காவல்துறை, அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.

Savuku Sankar and RJ Balaji
இந்த நிலையில், சவுக்கு சங்கரின் தைரியத்தைப் பாராட்டிய ஆர்.ஜே. பாலாஜி, தனக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ, அதற்காக அவர் தொடர்ந்து குரல் கொடுப்பதாகக் குறிப்பிட்டார். அவரது கருத்துகள் உண்மையா, பொய்யா என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர் பேசும்போது அதை உண்மையாக உணர வைக்கும் வகையில் பேசுகிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும், சவுக்கு சங்கர் கைது செய்யப்படும் நேரங்களில் அவரது வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது, நீதிபதியின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை தான் கவனிப்பதாகவும் ஆர்.ஜே. பாலாஜி கூறினார். “சவுக்கு சங்கர் பேசுவதைக் கேட்கவில்லை என்றால், எனக்கு அன்றைய நாளே முழுமையடையாது. அவருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்” என அவர் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
