அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும்? ஈரானின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் அதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
Summary
ஈரான் தரைப்படை தளபதி அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தரைப்படை ஈரான் மண்ணில் கால்வைத்தால், விரைவான தீர்க்கமான பதிலடி கொடுத்து அவர்களின் நடவடிக்கையை முறியடிப்போம் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிரி அச்சுறுத்தல்களை கண்காணித்து எல்லைகளை உறுதியாகப் பாதுகாக்கும் போர்த் தயார்நிலையில் இருப்பதாகவும், எந்த நேரடி பேச்சுவார்த்தையும் இன்றி இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே தகவல் பரிமாற்றம் நடப்பதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை விளக்குகிறது.
வாஷிங்டன்–தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாத நிலை நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, ஈரான் மீது எந்தவொரு வெளிநாட்டு தரைப்படை தலையீடும் நடத்தப்பட்டால், அதற்கு விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
“அமெரிக்க ராணுவ வீரர்கள் யாராவது ஈரான் மண்ணில் கால்வைத்தால், அவர்களின் நடவடிக்கையை முறியடிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Mojtaba Reuters
மேலும், எந்தவொரு எதிரி நடவடிக்கைக்கும் உறுதியான மற்றும் தடுப்பு நடவடிக்கையுடன் பதிலளிக்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஈரான் தரைப்படைகள் முழுமையான போர்த் தயார்நிலையில் இருப்பதாகவும், எதிரிகளின் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டின் எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, பொருளாதார அழுத்தத்தைத் தொடர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். Axios-க்கு அளித்த பேட்டியில், ஈரானுடன் அமெரிக்கா தற்போது “மிதமான அணுகுமுறையை” கடைப்பிடிப்பதாகவும், மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். ஈரானின் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியை வாஷிங்டன் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
“இது ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்” என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Trump
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே தகவல்கள் பரிமாறப்படுவதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவின் இடைக்கால ஒப்பந்த மீறல்கள் நிறுத்தப்படும் வரை பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் திறப்பதற்கு அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய பல்வேறு நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இதனால், மேற்கு ஆசியாவின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் மற்றும் பிராந்திய மோதலின் நிலைமை குறித்து மேலும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
