கோடிக்கணக்கான வாகனங்கள் இன்னும் காப்பீடு இல்லாமலேயே இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்துகள் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் வாகனம் வாங்கினாலே கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்று Third Party Insurance. ஆனால், சாலைகளில் ஓடும் கோடிக்கணக்கான வாகனங்கள் இன்னும் காப்பீடு இல்லாமலேயே இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விபத்துகள் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், வாகனக் காப்பீட்டு விதிகளைக் கடுமையாக அமல்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

INSURENCE
ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு வட்டியுடன் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, நாட்டில் சுமார் 16.54 கோடி வாகனங்கள் செல்லுபடியாகும் காப்பீடு இல்லாமல் இயக்கப்படுகின்றன என்றும், இந்தியாவில் உள்ள மொத்த வாகனங்களில் சுமார் 56% காப்பீடு இல்லாமல் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, செல்லுபடியாகும் Third Party Insurance இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்காத No Insurance, No Fuel திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு, சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் IRDAI இணைந்து தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காப்பீடு இல்லாத வாகனங்களைக் கண்டறிந்து, e-Challan அனுப்பும் நடைமுறைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

PETROL
ஆனால், “நாளை முதல் காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. “No Insurance, No Fuel” திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான Pilot Project-ஐ உருவாக்குமாறே மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்தத் திட்டம் தயாரான பிறகே, எந்த மாநிலங்களில், எப்போது, எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், காப்பீடு இல்லாமல் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மத்தியில் இந்த யோசனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
