உக்ரைனுடன் சேர்ந்து இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்டமசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Summary
ரஷ்யாவுடன் வர்த்தகம் தொடரும் நாடுகள் மீது 100% வரி விதிக்கும் மசோதாவை அமெரிக்க செனட் நிறைவேற்ற, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் ஆதரவு அளித்துள்ளார். இது பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் இந்திய ஏற்றுமதிக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும் வரிவிதிப்பில் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவந்தார். இந்தியா அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது என்று கூறி, இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்திருந்தார் டிரம்ப். இதற்கு ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதை முக்கிய காரணமாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், விரைவில் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவில்லை என்றால் இந்தியா மீதான வரி அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க வரிவிதிப்பின் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆடை, இறால், ஆபரண நகைகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுவது கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதால், இந்தியா மீதான அடிப்படை வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனிடையே பிற நாடுகளுக்கு கூடுதல் வரிகள் விதிப்பது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் அவசரக்கால பொருளாதாரச் சட்டத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அதிபர் தன்னிச்சையாக எந்தவொரு நாட்டின் மீதும் வரி விதிக்க முடியாது எனக் கூறி, டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனால் இதற்கான சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டிய கட்டாயம் டிரம்ப் அரசுக்கு ஏற்பட்டது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் அல்லது பிற பொருட்களைத் தொடர்ந்து வாங்கி வரும் நாடுகள் மீது 100% வரி போன்ற கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் முதற்கட்டமாக ஒரு மசோதா முன்மொழியப்பட்டது.

zelensky in us senate
இந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் நாடாளுமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த மசோதா உடனடியாக அமலுக்கு வராது என்றும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மற்றொரு சபையான பிரதிநிதிகள் சபையிலும் இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அது அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் கரும் அச்சமடைந்துள்ளனர். இந்த சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அது போல அமெரிக்காவின் வரிவிதிப்பில் இருந்து தப்பிக்க ரஷ்யாவுடனான வர்த்தகத்தை குறைக்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
