நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார்.
Summary
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிம்ரன், ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷாவின் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் கண்டு நெகிழ்ந்தார். சமூக வலைதளங்களில் வைரலான நிஷாவின் நடனத்தை பார்த்த சிம்ரன், அவரை நேரில் சந்தித்து, தன்னுடன் சேர்ந்து நடனமாடச் செய்ததுடன், பள்ளிக்குச் செல்ல நீண்டநாள் கனவாக இருந்த புதிய சைக்கிளையும் பரிசளித்து, கல்விக்கும் கனவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஊக்கமளித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம்வந்தவர் நடிகை சிம்ரன். இவரின் சமீபத்திய செயல் ஒன்று நெகிழ்ச்சியுடன் பேசப்பட்டு வருகிறது. ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப்போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்துவந்தார். நிஷாவின் நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது திறமையையும் தன்னம்பிக்கையையும் பலரிடம் கொண்டு சென்ற தன்னார்வலர் ஆஷிக், நிஷாவைப் பற்றியும் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் நடிகை சிம்ரனிடம் எடுத்துரைத்தார். மேலும், தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நிஷாவின் நீண்டநாள் கனவு என்பதையும் தெரிவித்தார்.
இதையறிந்த நடிகை சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்க அழைத்தார். அந்தச் சந்திப்பில், நிஷா நீண்ட நாட்களாகப் பயிற்சி செய்துவந்த சிம்ரனின் பாடலுக்கு அவருடனேயே இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல், நிஷாவின் நீண்டநாள் கனவாக இருந்த புதிய சைக்கிளையும் பரிசாக வழங்கியுள்ளார்.

Simran Nisha
மேலும், கல்வியின் முக்கியத்துவத்தை நிஷாவிடம் எடுத்துரைத்த நடிகை சிம்ரன், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் தனது கனவுகளையும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் பின்தொடர வேண்டும் என்றும் ஊக்கமளித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
