மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.களுக்கு மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்க சட்டபேரவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், அக்கட்சி மிகப்பெரிய உட்கட்சி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின், ரிதாபிரதா பானர்ஜி, தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருப்பதுடன், கட்சியையும் கைப்பற்றி அரூப் ராயைக் கட்சியின் புதிய தலைவராக அறிவித்து மம்தாவுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். மேலும், 20 மக்களவை எம்பிக்களும் திரிணாமுல் கட்சியில் இருந்து விலகியிருப்பது மம்தா பானர்ஜிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மம்தா பானர்ஜி
அந்தவகையில் தான், 2029 வரை பதவிக்காலம் கொண்ட சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பரைக் ஆகிய மூன்று திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததுடன், TMC-ல் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம், ஏற்கனவே, திரிணாமுல்-ன் மக்களவையில் 8 ஆக சரிந்த நிலையில், மாநிலங்களவையில் 10 ஆக சர்ந்தது. தொடர்ந்து, காலியாகவுள்ள மேற்குவங்க மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனையடுத்து, தங்கள் மாநிலங்களவை இடங்களை ராஜினாமா செய்தவர்களையே பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பரைக் நேற்று மாநிலங்களவை இடங்களுக்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில், 207 இடங்களையும், ரிதாபிரதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் 65 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக வேட்பாளர்களே 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூன்று பேரும் மீண்டும் மாநிலங்களவை செல்ல இருக்கின்றனர்.

பாஜக
அதிகரிக்கும் பாஜக பலம்
நாட்டின் மாநிலங்களவையில், மொத்தம் 245 இடங்கள் உள்ளன. இதில் தனிப்பெரும்பான்மை பெற 123 இடங்கள் தேவையாகும். தற்போது, பாஜகவில் 114 இடங்கள் இருக்கு நிலையில், மேற்கு வங்கத்தில் இருந்து 3 பேர் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் அதன் பலம் 117 அதிகரிக்கும். இதன்மூலம், தனிப்பெரும்பான்மைக்கு 6 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலை உருவாகும். அதேசமயம், மாநிலங்களவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பலர் 152-ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 166 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதற்கு அருகிலும் பாஜக வந்திருக்கிறது.
கடைசியாக ஒருகட்சி மாநிலங்களவையில் பெரும்பான்மையைப் பெற்றதென்றால், அது கடந்த 1986-ம் ஆண்டு நடைபெற்ற ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தான்.
